Published : 16 Feb 2023 02:40 PM
Last Updated : 16 Feb 2023 02:40 PM
சென்னை: "பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இன்றைய நிலையில் ஒரு மூத்த பேராசிரியர் கூட இல்லை. மூத்த பேராசிரியர் என்பது கிடைப்பதற்கரிய பெருமை. ஒரு சிலருக்கு மட்டுமே அந்த வாய்ப்பு கிடைக்கும். தகுதியுள்ள பேராசிரியர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைப்பதை தடுப்பது அநீதி" என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் பேராசிரியராக பணியாற்றியவர்களுக்கு மூத்த பேராசிரியர்களாக பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். இதற்காக 14 பேராசிரியர்களிடமிருந்து 25.04.2019-ல் விண்ணப்பம் பெற்று 4 ஆண்டுகளாகியும் பதவி உயர்வு வழங்கப்படவில்லை.
உதவி பேராசிரியர்கள், இணை பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுவிட்ட நிலையில், பேராசிரியர்களுக்கு மட்டும் வழங்கப்படாதது நியாயமல்ல. இதில் செய்யப்படும் தாமதத்தால் கடந்த 4 ஆண்டுகளில் 10 பேராசிரியர்கள் பதவி உயர்வு பெறாமலேயே ஓய்வு பெற்றுவிட்டனர்.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இன்றைய நிலையில் ஒரு மூத்த பேராசிரியர் கூட இல்லை. மூத்த பேராசிரியர் என்பது கிடைப்பதற்கரிய பெருமை. ஒரு சிலருக்கு மட்டுமே அந்த வாய்ப்பு கிடைக்கும். தகுதியுள்ள பேராசிரியர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைப்பதை தடுப்பது அநீதி.
7 பேர் கொண்ட தேர்வுக் குழுவுக்கு மாநில அரசின் பேராளர் நியமிக்கப்படாதது தான் தாமதத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. அதனால், தமிழக அரசு இனியும் தாமதிக்காமல் உடனடியாக பேராளரை நியமித்து, மூத்த பேராசிரியர் பதவி உயர்வு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT