Published : 16 Feb 2023 11:48 AM
Last Updated : 16 Feb 2023 11:48 AM
ஈரோடு: ஈரோடு கிழக்கில் கூடாரங்களில் வாக்காளர்களை திமுகவினர் அடைத்து வைத்துள்ளனர் என அதிமுகவினர் குற்றஞ்சாட்டிய நிலையில், அதிமுகவினரை சந்திக்க வாக்காளர்கள் விரும்பாததால், எங்களோடு இணைந்து தேர்தல் பணியாற்றுகின்றனர் என திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் களைகட்டியுள்ளது. அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவை ஆதரித்து, எதிர்கட்சித்தலைவர் பழனிசாமி, நேற்று தீவிர பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். ‘நூற்றுக்கும் மேற்பட்ட கூடாரங்களில் வாக்காளர்களை அடைத்து வைத்து, அதிமுகவினர் சந்திக்க விடாமல் செய்கின்றனர்’ என்று தனது பிரச்சாரத்தில் குற்றம் சாட்டியுள்ளார் பழனிசாமி. திமுகவினர் தேர்தல் விதிமீறலில் ஈடுபடுவது குறித்து முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, சட்டப்பிரிவு நிர்வாகி இன்பதுரை ஆகியோர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளித்துள்ளதோடு, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இதுகுறித்து ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த முறை வேட்பாளராக போட்டியிட்ட தமாகா இளைஞரணித் தலைவர் எம்.யுவாராஜா, "இந்திய தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக திமுக ஒரு தவறான முன்னுதாரணத்தை இந்த இடைத்தேர்தலில் ஏற்படுத்துகின்றனர். மாற்றுக் கட்சியினர் மக்களைச் சந்திக்கக் கூடாது என்பதற்காக, திமுகவினர் ஈரோட்டில் 120 இடங்களில் கொட்டகை அமைத்து வாக்காளர்களை அதில் அடைத்து வைத்துள்ளனர்.
தலைவர்கள் பிரச்சாரம் இல்லாத நாட்களில் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 8 மணி வரை வாக்காளர்களை அடைத்து வைப்பதோடு, பிரச்சாரம் என்ற பெயரில் ஊர்வலமாக அழைத்துச் செல்கின்றனர். இதற்கென ஒரு வாக்காளருக்கு நாள் ஒன்றுக்கு, ரூ 500 முதல் 1000 வரை வழங்கப்படுகிறது. வாக்காளர்களுக்கு உணவும் வழங்கப்படுகிறது.
எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி நேற்று பிரச்சாரத்திற்கு வந்தபோது, காலை 11 மணி முதல் இரவு வரை அடைத்து வைத்து, தலா ரூ 2000 விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
கருங்கல்பாளையம் பகுதியில் உள்ள வாக்காளர்களை மேட்டூர் அணைக்கு இன்பச்சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளனர். இதோடு, சென்னிமலை, சிவன்மலை என வாக்காளர்களை ஆன்மிக சுற்றுலாவும் அழைத்து செல்கின்றனர். கருங்கல்பாளையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமையில், மட்டன், சிக்கன், மீன் இறைச்சி வீடுதோறும் ஒரு கிலோ வழங்கப்பட்டுள்ளது. இது போல கோலம்போட, ஆரத்தி எடுக்க, பூக்களைத் தூவ பணம், தட்டு, குடம் போன்ற பரிசுப்பொருட்களும் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
வாக்காளர்களை அதிமுக வேட்பாளரும், அவரது கூட்டணிக் கட்சியைச் சார்ந்தவர்களும் சந்தித்து விடக்கூடாது என்பதற்காக, தேர்தல் விதிமுறைகளை மீறி ரூ 100 கோடிக்கு மேல் செலவு செய்து மக்களை ஏமாற்ற பார்க்கின்றனர். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.
திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை மக்கள் மறந்து விடுவார்கள் என்று நினைக்கின்றனர். தவறான வழியில் வந்த பணத்தை அமைச்சர்கள் கொடுக்கிறார்கள். அதனை வாங்கிக் கொள்ளுங்கள். அதே நேரத்தில் ஆளுங்கட்சியினர் செய்யும் தவறுகளுக்கு ஒரு வேகத்தடை ஏற்படுத்துவது போல், அதிமுகவிற்கு வாக்களியுங்கள் என்ற எங்களின் வேண்டுகோளை மக்கள் மனப்பூர்வமாக ஏற்கின்றனர்" என்றார்.
ஆனால், ஆளுங்கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களோ, கடந்த 18 மாதத்தில் தமிழக முதல்வர் செய்த சாதனைகளைச் சொல்லி வாக்கு சேகரிக்கிறோம். வாக்காளர்கள் எங்களுக்கு உற்சாகமாக வரவேற்பு அளித்து, வாக்களிப்பதாக உறுதி அளிக்கின்றனர் என்கின்றனர்.
தேர்தல் விதிமீறல் குற்றச்சாட்டு குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:
அரசின் மீது குற்றச்சாட்டு சொல்ல வேண்டும், அவதூறு கிளப்ப வேண்டும் என்பதற்காக பொய் புகார்களைக் கொடுக்கின்றனர். முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், ‘50 ஆயிரம் போலி வாக்காளர் உள்ளதாக’ புகார் தெரிவிக்கிறார். ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர் பட்டியலை திமுக தயாரிக்கவில்லை. தேர்தல் ஆணையம் தான் வாக்காளர் பட்டியலை தயாரிக்கிறது. 2021-ல் ஈரோடு கிழக்கில் இருந்த வாக்காளர்கள் எவ்வளவு, தற்போது எவ்வளவு வாக்காளர்கள் உள்ளனர், எப்படி போலி வாக்காளர்கள் வருவார்கள் என்று அவரிடம் பத்திரிகையாளர்கள் கேட்க வேண்டும்.
முதல்வர் மு.க. ஸ்டாலினின் ஆதரவு பெற்ற வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்று விடுவார் என தெரிந்து, தோல்விக்கான காரணங்களை இப்போதே அதிமுகவினர் பட்டியலிடுகின்றனர். அனைத்து கூடாரங்களும் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி, அனுமதி பெற்று அமைக்கப்பட்டுள்ளது. அதிமுகவினரைச் சந்திக்க வாக்காளர்கள் விரும்பவில்லை. அதனால், எங்களோடு அவர்கள் இருக்கிறார்கள். எங்களை அடைத்து வைத்துள்ளதாக, தேர்தல் ஆணையத்திற்கு வாக்காளர்கள் யாரேனும் புகார் அளித்துள்ளார்களா?
எங்கள் பகுதியில் பிரச்சாரம் செய்த செங்கோட்டையன், ‘கைதட்ட கூட கூட்டம் வரவில்லை. வந்திருக்கிற 10 பேராவது கைதட்டுங்கள்’ என்று கேட்கும் நிலைக்கு வாக்காளர்கள் அதிமுகவை புறக்கணிக்கின்றனர். அதிமுகவினர் விரக்தியில் உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT