Published : 16 Feb 2023 04:36 AM
Last Updated : 16 Feb 2023 04:36 AM

பள்ளி மாணவர்கள் வடிவமைத்த 150 செயற்கை கோள் பிப். 19-ல் விண்ணில் ஏவப்படும்

சென்னை: மார்ட்டின் அறக்கட்டளை, டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் அறக்கட்டளை மற்றும் ஸ்பேஸ் ஜோன் இந்தியா அமைப்பு ஆகியவை இணைந்து பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் தொழில்நுட்பம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவற்காக பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுத்து வருகின்றன. அந்தவகையில் மாணவர்களின் பங்களிப்பில் தயாரிக்கப்பட்ட 150 சிறிய செயற்கைக் கோள்கள் சவுண்டிங் ராக்கெட் மூலம் பிப்.19-ம் தேதி ஏவப்பட உள்ளது. இதற்கு டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் செயற்கைக் கோள் ஏவுதல் திட்டம்-2023 என பெயரிடப்பட்டுள்ளது.

சவுண்டிங் ராக்கெட்: இதன் அறிமுக நிகழ்ச்சி சென்னை தேனாம்பேட்டையில் நேற்று நடைபெற்றது.

அப்போது ஸ்பேஸ் ஜோன்பிரைவேட் லிமிடெட் நிறுவனர் ஆனந்த் மேகலிங்கம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாடு முழுவதும் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் 5,000 மாணவர்கள் மூலம் 150 சிறியரக செயற்கைக் கோள்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த செயற்கைக் கோள்கள் சவுண்டிங் ராக்கெட் மூலம் பிப். 19-ம் தேதி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பட்டிப்புலம் என்ற இடத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட உள்ளது. இதில் தமிழகத்தில் இருந்து 2,000 மாணவர்கள் பங்கேற்கின்றனர்.

இந்த செயற்கைக் கோள்களை சுமந்து செல்லும் சவுண்டிங் ராக்கெட்டையும் எங்கள் குழுவினரே தயாரித்துள்ளோம். 3 மீட்டர் உயரம் கொண்ட அந்த ராக்கெட்டின் எடை 65 கிலோவாகும். சுமார் ரூ.2.5 கோடி மதிப்பில் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தரையில் இருந்து 5 முதல் 6 கிமீதூரத்துக்கு வானில் பாய்ந்து செல்லும் இந்த ராக்கெட்டுக்குள் இருக்கும் செயற்கைக் கோள்கள் மூலம் காற்றின் தரம், ஓசோன் படலத்தின் தன்மை, வெப்பநிலை, காற்றின் அழுத்தம், கார்பன் அளவு உட்பட பல்வேறு தரவுகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு பயன்படுத்தப்பட உள்ளன.

இந்த திட்டத்தின் மூலம் மாணவர்கள் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதவியல் துறைகளில் கற்றுக் கொள்ளும் வாய்ப்பையும் வழங்க முடியும்.

19 நிமிடங்களில்...: மேலும், வானில் செயற்கைக் கோள்களை செலுத்திய பின்பு கடலில் விழும் ராக்கெட் பகுதிகளை மீண்டும் நம்மால் பயன்படுத்த முடியும். சுமார் 19 நிமிடங்களில் இந்த ஏவுதல் திட்டம் முழுமையடையும். இது இந்தியாவிலேயே முதல் முயற்சியாகும். விரைவில் இஸ்ரோவுடன் இணைந்து பணியாற்றவும் திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்வில் மார்ட்டின் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி ஜார்ஜ் மார்ஷல், டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் சர்வதேச அறக்கட்டளையின் இணை நிறுவனர்கள் ஷேக் தாவூத், ஷேக் சலீம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x