Published : 16 Feb 2023 06:20 AM
Last Updated : 16 Feb 2023 06:20 AM
சென்னை: தொழில் நல்லுறவு விருதுக்கு வரும் 28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தொழிலாளர் நலத் துறை ஆணையர் அதுல் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் அறிவுறுத்தலின்படியும், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைச் செயலர் முகமது நசிமுதீன் ஆலோசனைபடியும், ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.மாரிமுத்து தலைமையில், தொழில் நல்லுறவு பரிசுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
வேலை அளிப்பவர்கள் மற்றும் தொழிலாளர்கள் இடையே தொழில் அமைதியும், நல்ல தொழில் உறவு நிலவுவதையும் ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு ‘தொழில் நல்லுறவு பரிசுத் திட்டத்தை’ ஏற்படுத்திஉள்ளது.
நல்ல தொழில் உறவைப் பாதுகாக்க,நிறுவனங்கள் ( வேலை அளிப்பவர்கள்) மற்றும் தொழிற் சங்கங்களுக்கு, 2017, 2018, 2019, 2020-ம் ஆண்டுக்கான சிறப்பு விருதுகளை, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட முத்தரப்புக் குழு தேர்ந்தெடுக்கும்.
விண்ணப்பப் படிவங்களை தொழிலாளர் நலத் துறையின் இணையதளத்தில் (http://www.labour.tn.gov.in/labour) பதிவிறக்கம் செய்து, விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடனும், விண்ணப்பக் கட்டணம் செலுத்திய விவரத்தையும் இணைத்து, சென்னை தொழிலாளர் ஆணையர் அலுவலகத்துக்கு வரும் 28-ம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும்.
ஒவ்வொரு விண்ணப்பத்துடனும், தொழிற்சங்கம் ரூ.100-ம், வேலை அளிப்பவர் ரூ.250-ம் கருவூல வலைதளத்தில் (https://www.karuvoolam.tn.gov.in/challan/echallan) கட்டணமாக செலுத்தி, அதற்கான அசல் ரசீதை இணைத்து அனுப்ப வேண்டும். இது தொடர்பான வழிகாட்டுதல்கள், தொழிலாளர் நலத் துறை இணையதளத்தில் உள்ளன. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT