Published : 16 Feb 2023 07:37 AM
Last Updated : 16 Feb 2023 07:37 AM
சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் பல்வேறு பணிகளுக்கான தேர்வுகள் கடந்தாண்டு நடத்தப்பட்டன. அதன் முடிவுகள் குறித்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு நில அளவை துறையில் கள ஆய்வாளர், வரைவாளர் பணிகள் மற்றும் தமிழ்நாடு நகர் மற்றும் திட்டமிடல் துறையில் நில அளவையாளர், உதவி வரைவாளர் பணிகளில் காலியாக உள்ள 1,112 இடங்களுக்கு கடந்த நவம்பர் 6-ல் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு முடிவு நேற்று வெளியானது.
இதேபோல, 16 தொழில் ஆலோசகர் பணியிடங்களுக்கு கடந்த நவம்பர் 12-ம் தேதி நடத்தப்பட்ட தேர்வு முடிவும் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. குரூப் 1 பதவிகளில் உள்ள 95 காலியிடங்களுக்கு நவம்பர் 19-ல் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை ஒரு லட்சத்து 90,957 பேர் எழுதினர். இதன் முடிவு வரும் மார்ச் மாதம் வெளியிடப்படுகிறது. மேலும், குரூப் 4, குரூப் 7பி, குரூப் 8-ல் வரும் பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு நடத்தப்பட்ட தேர்வு முடிவுகளும் அடுத்த மாதம் வெளியாக உள்ளது.
இதுதவிர, மீன்வளத்துறை ஆய்வாளர், உதவி ஆய்வாளர் பணித் தேர்வுக்கான முடிவுகள் ஏப்ரல் மாதமும், குரூப் 3ஏ பதவிகளுக்கு நடத்தப்பட்ட தேர்வு முடிவு மே மாதமும் வெளியிடப்படும். மேலும், 10 வனப் பயிற்சியாளர், 8 சிறை வார்டன், 217 ஒருங்கிணைந்த புள்ளியியல் பணியிடங்களுக்கு கடந்த டிசம்பரில் நடத்தப்பட்ட தேர்வு முடிவுகளும் மார்ச் மாதம் வெளியிடப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT