Published : 16 Feb 2023 04:03 AM
Last Updated : 16 Feb 2023 04:03 AM
திருப்பூர்: கேரளாவில் இருந்து திருப்பூர் மாவட்ட எல்லைக்குள் கோழி இறைச்சிக் கழிவுகள் உட்பட பல்வேறு கழிவுகளை கொண்டு வந்து கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சு.வினீத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கேரள மாநிலத்தில் இருந்து சட்ட விரோதமாக மருத்துவக் கழிவுகள் மற்றும் நகராட்சி திடக் கழிவுகளும், தமிழக எல்லைப் புற கிராமங்களில் கொட்டப்படுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம், போலீஸாருடன் இணைந்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக மாசுக் கட்டுப் பாட்டு வாரியத் தலைவர், கேரள மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘கேரளாவில் இருந்து எந்தவித கழிவுப் பொருட்களும், தமிழக எல்லைக்குள் கொண்டு வராமல் தடுக்க கேரள அரசின் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஆணை பிறப்பிக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.
எல்லைகளில் சோதனை: இதையடுத்து, திருப்பூர் மாவட்ட எல்லைகளில் சோதனைச்சாவடிகள் அமைத்து மாவட்ட போலீஸார், வருவாய்த் துறையினர் கண்காணித்து வருகின்றனர். சட்ட விரோதமாக கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள் மற்றும் திடக் கழிவுகளால் நீர்நிலைகள், விவசாய நிலங்கள் பாழாகின்றன. நோய்களும் பரவுகின்றன.
கேரளா மற்றும் பிற மாநிலங்களில் சட்ட விரோதமாக மருத்துவக் கழிவுகள் மற்றும் இதர திடக் கழிவுகளை ஏற்றி வரும் வாகனங்களின் மீதும், அதன் உரிமையாளர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். எல்லையோர கிராமங்களில் பயன் படாத விவசாய நிலங்களை குத்தகைக்கு வாங்கி, கழிவுகள் கொட்டப்படுவது தெரிய வந்துள்ளது.
அவ்வாறு நிலங்களை குத்தகைக்கு விடும் நில உரிமையாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கேரளாவில் இருந்து கோழிக் கழிவுகள் மற்றும் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவது தொடர்பாக தகவல் அறிந்தால், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 0421-2971100, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் 0421-2970017,
வடக்கு மாசுக்கட்டுப் பாட்டு வாரிய அலுவலகம் 0421-2236210, தெற்கு மாசுக் கட்டுப் பாட்டு வாரிய அலுவலகம் 04255-252225, பறக்கும் படை அலுவலர் 0421-2241131 என்ற எண்களில் தொடர்புகொண்டு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT