

சென்னை: சென்னை மாநகரில் கொசுவை ஒழிக்க மழைநீர் வடிகால்களில் மாநகராட்சி நிர்வாகம் கவனம் செலுத்தி வருகிறது. கடந்த 3 நாட்களில் 817 கிமீ நீளத்துக்கு கொசுக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி பகுதிகளில் எப்போதும் இல்லாத வகையில் கடந்த 2 வாரங்களாக கொசுத்தொல்லை அதிகமாக இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வீடுகளில் கொசு வலைக்குள் தஞ்சமடையும் நிலை உள்ளது.
இந்நிலையில், `இந்து தமிழ் திசை' செய்தி எதிரொலியாக சென்னை மாநகராட்சி சார்பில் கடந்த 12-ம் தேதி முதல் தீவிர கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொண்டு வருகின்றன. `இந்து தமிழ் திசை' நாளிதழில் மழைநீர் வடிகால்களில் கழிவுநீர் தேங்குவதால் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன.
அதன் மீது மாநகராட்சி கவனம் செலுத்துவதில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது மேற்கொண்டு வரும் கொசு ஒழிப்பு பணியில் மழைநீர் வடிகால்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 3 நாட்களில் மழைநீர் வடிகால்களில் 817 கிமீ நீளத்துக்கு கொசுக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டுள்ளது. மேலும் மழைநீர் வடிகால்களில் 829 கிமீ நீளத்துக்கு கொசு ஒழிப்பு புகை பரப்பும்பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் 10 ஆயிரத்து 723 தெருக்களில் கொசு ஒழிப்புப் புகை பரப்பும் பணிகள் நடைபெற்றுள்ளன. நீர்நிலைகளில் 208 கிமீ நீளத்துக்கு ட்ரோன் மற்றும் படகுகள் மூலம் கொசுக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டுள்ளது. 231 தெருக்களில் உள்ள மழைநீர் வடிகாலில் தேங்கியிருந்த தண்ணீரை வெளியேற்றி, நீர்நிலைகளுக்கு அனுப்பப்பட்டது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.