Published : 15 Feb 2023 11:05 PM
Last Updated : 15 Feb 2023 11:05 PM
புதுச்சேரி: என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக இடையே பிரச்சனை வராதா என இலவுகாத்த கிளி போல் நாராயணசாமி எதிர்பார்த்து காத்திருக்கிறார். இதையெல்லாம் விட்டுட்டு நாராயணசாமி அவருடைய கட்சியை வளர்ச்சிபாதையில் கொண்டு சொல்ல கவனம் செலுத்த வேண்டும் என புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
வீடூர் அணையில் இருந்து பாசன வசதிக்காக திறக்கப்பட்ட தண்ணீர் புதுச்சேரி எல்லையான சந்தைபுதுக்குப்பம் வந்தது. அதனை புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் இன்று பூத்தூவி வரவேற்றார். இதில் அமைச்சர் சாய் ஜெ சரவணன்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர். தொடர்ந்து மண்ணாடிப்பட்டு தொகுதிக்குட்பட்ட திருக்கனூர், மண்ணாடிப்பட்டு, கூனிச்சம்பட்டு ஆகிய பகுதிகளில் நூறு நாள் வேலை திட்டப்பணியை அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்தார்.
கூனிச்சம்பட்டு கிராமத்தில் நூறு நாள் வேலை திட்டத்தில் எங்களுக்கு நூறு நாட்கள் கிடைப்பதில்லை. எனவே குறைந்தது 50 நாட்களாவது வேலை வழங்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர். அதற்கு அமைச்சர் அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். தொடர்ந்து அரிசிக்கு பதில் பணம் வழங்குவதை நிறுத்திவிட்டு ரேஷன் கடைகள் மூலம் அரிசி வழங்க வேண்டும் என்றனர்.
அதற்கு அமைச்சர் நமச்சிவாயம், "அரிசி வழங்குவதில் சில பிரச்சனைகள் இருக்கிறது. ஆகவே தான் அரசு அரிசிக்கு பதில் பணம் வழங்குகிறது" என்று தெரிவித்தார். மேலும் பள்ளி மாணவர்கள் மதிய உணவு சரியில்லை என புகார் கூறினர். அதற்கு அமைச்சர் "நானே நேரில் ஆய்வு செய்து உணவை சாப்பிட்டு பார்த்தேன். ஆகவே அதற்கு தேவையான நடவடிக்கையை எடுத்து வருகிறோம்" என்றார்.
இதையடுத்து அமைச்சர் நமச்சிவாயம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பல்வேறு பகுதியில் உள்ள மக்கள் பல விதமான குறைபாடுகளை தீர்க்குமாறு கூறியிருக்கிறார்கள். கடந்த காலங்களில் என்னென்ன பணிகள் நிறைவேற்றப்படாமல் இருந்ததோ, அவற்றையெல்லாம் நான் எம்எல்ஏவாக பொறுப்பேற்ற பிறகு ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றி வருகிறேன்.
ஒரே நாளில் எல்லா பிரச்னையும் தீர்த்துவிட முடியாது. நான் எம்எல்ஏவாக பொறுப்பேற்று 2 ஆண்டுகள் ஆகின்றது. இதுவரை 50 சதவீத பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மேலும் இருக்கின்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறேன். சாலை, தண்ணீர், மின் விளக்கும், நூறு நாள் வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு கண்டுள்ளேன். எதிர்காலத்தில் மண்ணாடிப்பட்டு தொகுதியில் அனைத்து திட்டங்களும் சரியான முறையில் சரியான நேரத்தில் நிறைவேற்றப்படும்.
முன்னாள் முதல்வர் நாராயணசாமி எந்த அளவுக்கு வயிற்று எரிச்சலில் இருக்கிறார் என்பது அவரது பேச்சு மூலம் தெரிகிறது. மண்ணாடிப்பட்டு தொகுதிக்கு நான் டீ குடிப்பதற்கு மட்டும் வருகிறேனா அல்லது அனைத்து வளர்ச்சி திட்ட பணிகளுக்கு உரிய பூமிபூஜை போட வருகிறேனா என்பது மக்களுக்கு தெரியும். என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஒரு கட்டாய திருமணம் என்று நாராயணசாமி கூறியிருக்கிறார். காங்கிரஸ் - திமுக கூட்டணிதான் கட்டாய திருமணம் செய்து கொண்டிருக்கிறது.
காங்கிரஸ் - திமுகவுக்கு இடையே யார் பெரிய கட்சி என்ற போட்டி இருக்கிறது. முதலில் அவர்களுக்குள் உள்ள பிரச்னையை பார்க்கட்டும். எங்களுடையது கட்டாய திருமணம் கிடையாது. எல்லாமே விருப்பப்பட்டுதான் இந்த ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. எல்லா திட்டங்களையும் நிறைவேற்றி கொண்டிருக்கிறோம். மக்களுக்கு அனைத்து திட்டங்களும் போய் சேர்கிறது என்ற ஆதங்கத்தில் முன்னாள் முதல்வர் பேசுகிறார். எங்களுக்கு ஏதாவது ஒரு பிரச்னை வராதா என்று இலவுகாத்த கிளி போல் நாராயணசாமி எதிர்ப்பார்த்து காத்து கொண்டிருக்கிறார்.
இதையெல்லாம் முன்னாள் முதல்வர் விட்டுட்டு அவருடைய கட்சியை வளர்ச்சிபாதையில் கொண்டு சொல்ல கவனம் செலுத்த வேண்டும். அவருடைய கட்சியில் உள்ள பிரச்னையை முதலில் பார்க்க வேண்டும். முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், முன்னாள் எம்எல்ஏ அனந்தராமன் ஆகியோர் முன்னாள் முதல்வர் புதுச்சேரி பக்கமே திரும்ப கூடாது என்ற கோரிக்கை வைத்துள்ளனர். அதை திசை திருப்புவதற்காக என்.ஆர்.காங்கிரஸ்-பாஜகவுக்கு இடையே பிரச்னை இருப்பது போல் ஒரு மாய தோற்றத்தை மக்கள் மத்தியில் உருவாக்க நினைக்கிறார். இதை மக்கள் நம்ப மாட்டார்கள். நாராயணசாமியை பற்றி மக்களுக்கு நன்றாகவே தெரியும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT