Published : 15 Feb 2023 07:51 PM
Last Updated : 15 Feb 2023 07:51 PM

சிறுதானிய பதப்படுத்தும் மையம், தென்னை ஆராய்ச்சி மையம் வேண்டும்: சேலம் வந்த முதல்வர் ஸ்டாலினிடம் வலியுறுத்தல்

'கள ஆய்வில் முதலமைச்சர்' திட்டத்தின் கீழ் சேலம் பழைய பேருந்து நிலையத்தை சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் ஈரடுக்கு பேருந்து நிலையமாக மாற்றி அமைக்கும் கட்டுமான பணிகளை முதல்வர் மு.க ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். உடன் தலைமைச் செயலர் இறையன்பு, மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உள்ளிட்டோர்.

சேலம்: சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த ‘கள ஆய்வில் முதல்வர்’ திட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலினிடம், தருமபுரியில் முதல்நிலை சிறுதானியம் பதப்படுத்தும் மையம், கிருஷ்ணகிரியில் தென்னை ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை சங்க பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த ‘கள ஆய்வில் முதல்வர்’ நிகழ்ச்சியில், சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள், லாரி கட்டுமான தொழில் நிறுவனங்கள், ஜவ்வரிசி மற்றும் ஸ்டார்ச் உற்பத்தியாளர்கள், மாம்பழக்கூழ் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விவசாயிகள் சங்கம் உள்பட பல்வேறு சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.

தொழிற்சாலைகளில் மின் கட்டணம் குறைக்க வலியுறுத்தல்: இந்த கலந்துரையாடலின் போது, சேலம் சிட்கோ தொழிற்பேட்டையில் சிறு மற்றும் குறுந் தொழிற்சாலைகள் சங்கத்திற்கு தனி அலுவலகம், பயிற்சி மற்றும் கூட்ட அரங்கம் அமைக்க இடம் ஒதுக்கி, நிதியுதவி அளிக்க வேண்டும். தொழிற்சாலைகளுக்கான அதிக பயன்பாடு உள்ள நேர மின் கட்டணத்தை குறைக்க வேண்டும். கிருஷ்ணகிரியில் தென்னை ஆராய்ச்சி மையம் மற்றும் தேங்காய் எண்ணெய் உற்பத்தி ஆலை தொடங்க வேண்டும் என்று சங்க பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர்.

'கள ஆய்வில் முதலமைச்சர்' திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்ட போது பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். உடன் தலைமைச் செயலர் இறையன்பு, மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உள்ளிட்டோர்.

வேளாண் தகவல்களுக்கு விவசாயிகள் பண்பலை அவசியம்: தருமபுரியில் முதல்நிலை சிறுதானியம் பதப்படுத்தும் மையம் மற்றும் சேமிப்புக் கிடங்கு அமைத்து தர வேண்டும் மற்றும் வேளாண்மை செய்திகளுக்காக “விவசாயிகள் பண்பலை” நிலையம் அமைக்க வேண்டும். மாம்பழக்கூழ் கழிவுகளைக் கொண்டு இயற்கை எரிவாயு ஆலை மற்றும் ஏற்றுமதி மையம் அமைத்து தர வேண்டும்.பையூர் வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் மாம்பழ சாகுபடிக்கான தனித்துறையை உருவாக்கி தர வேண்டும் என்ற கோரிக்கையை சங்க பிரதிநிதிகள் முன்வைத்தனர்.

'கள ஆய்வில் முதலமைச்சர்' திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்ட போது பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

மலையகப்பகுதிகளில் தேவை சாலை வசதி: சேலத்தில் ஜவ்வரிசி மற்றும் ஸ்டார்ச் உற்பத்தியாளர்களுக்கு ரொக்க கடன் வட்டி மானியம் அளித்திடவும், சேகோ மற்றும் ஸ்டார்ச்க்கு குறைபட்ச ஆதார விலை நிர்ணயிக்கவும், மதிப்புக் கூட்டு பொருட்களை தயாரிக்க சேகோசர்வ் மூலம் ஆராய்ச்சிக்கூடம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

மேலும், நாமக்கல்லில் லாரி பாடி கட்டும் தொழிற்பேட்டையில்,அனைத்து தொழிலகங்களுக்கும் ஒரே வடிவமைப்பில் ஷெட் அமைக்கவும், தொழில் செய்ய உபகரணங்களுக்கு நிதியுதவி அளிக்க வேண்டும். சேலம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மலையகப் பகுதியில்,பழங்குடி மக்களுக்கு சாலை வசதிகள் மற்றும் கால்நடை மருத்துவமனை வசதிகள் செய்து தர வேண்டும் என்று சங்கங்களின் பிரதிநிதிகள் முன் வைத்த கோரிக்கையை கேட்டறிந்த முதல்வர் ஸ்டாலின், இதுகுறித்து பரிசீலித்து நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தார்.

நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் முனைவர் இறையன்பு, சேலம் ஆட்சியர் கார்மேகம், நாமக்கல் ஆட்சியர் ஸ்ரேயா பி. சிங், பட்டுவளர்ப்புத் துறை இயக்குநர் விஜயா ராணி, கிருஷ்ணகிரி ஆட்சியர் தீபக் ஜேக்கப், தருமபுரி ஆட்சியர் சாந்தி,சேகோசர்வ் மேலாண்மை இயக்குநர் பூங்கொடி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, சேலம் வந்த முதல்வர் ஸ்டாலின், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.92.13 கோடி மதிப்பீட்டில் சேலம் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் கட்டப்பட்டு வரும் ஈரடுக்கு பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x