Published : 15 Feb 2023 03:55 PM
Last Updated : 15 Feb 2023 03:55 PM

பிபிசி ரெய்டு | பத்திரிக்கை சுதந்திரத்திற்கு வெளிப்படையான மிரட்டல்: சீமான் கருத்து

சீமான் | கோப்புப்படம்

சென்னை: "உலகப்புகழ் பெற்ற ஊடகமான பிபிசியின் ஆவணப்படத்தை நேர்மையாக எதிர்கொள்ள திராணியற்று, எதேச்சதிகாரப் போக்கோடு அவற்றிற்குத் தடை விதித்த ஒன்றிய அரசு, தற்போது அதன் நீட்சியாக வருமானவரித் துறையினரை ஏவிவிட்டு, தனது அதிகாரப் பலத்தைக் காண்பிக்க முற்படுவது வெட்கக்கேடானது" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மும்பை மற்றும் டெல்லியிலுள்ள பிபிசி ஊடகத்தின் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியிருப்பது அப்பட்டமான அதிகார முறைகேடாகும். குஜராத்தில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை குறித்தான ஆவணப்படத்தை வெளியிட்டதற்கு எதிர்வினையாகப் பழிவாங்கும் போக்கோடு நிகழ்த்தப்பட்டிருக்கும் இந்நடவடிக்கை என்பது பத்திரிகைச் சுதந்திரத்திற்கு விடப்பட்டிருக்கும் வெளிப்படையான மிரட்டலாகும்.

உலகப்புகழ் பெற்ற ஊடகமான பிபிசியின் ஆவணப்படத்தை நேர்மையாக எதிர்கொள்ள திராணியற்று, எதேச்சதிகாரப்போக்கோடு அவற்றிற்குத் தடைவிதித்த ஒன்றிய அரசு, தற்போது அதன் நீட்சியாக வருமானவரித் துறையினரை ஏவிவிட்டு, தனது அதிகாரப்பலத்தைக் காண்பிக்க முற்படுவது வெட்கக்கேடானது.

வருமானவரித் துறை, மத்தியப் புலனாய்வுத் துறை, மத்திய அமலாக்கத் துறை என தன்னாட்சி அமைப்புகள் யாவற்றையும் கையகப்படுத்தி, அதன்மூலம் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்களையும், சனநாயகவாதிகளையும், சமூகச் செயற்பாட்டாளர்களையும், மண்ணுரிமைப் போராளிகளையும், நேர்மையான ஊடகங்களையும் அச்சுறுத்தி வரும் ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் கொடுங்கோல் நடவடிக்கைகளுக்கு எனது வன்மையான கண்டனத்தையும், எதிர்ப்புணர்வையும் பதிவுசெய்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x