Published : 15 Feb 2023 02:32 PM
Last Updated : 15 Feb 2023 02:32 PM
கிருஷ்ணகிரி: தமிழகத்திலேயே பெரிய புளி சந்தை கூடும் கிருஷ்ணகிரியில் புளியைச் சேமிக்க நவீன குளிர் பதன கிடங்கு அமைக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயம் பிரதானத் தொழிலாக உள்ளது. இங்கு மலை, சிறுகுன்றுகள் அதிகம் உள்ள நிலையில் வறட்சியைத் தாங்கும் புளி சாகுபடியில் விவசாயிகள் அதிக அளவில் ஈடுபடுகின்றனர்.
ராஞ்சிக்கு அடுத்து...: இதனால், இங்கு அதிக அளவில் உற்பத்தியாகும் புளியைச் சந்தைப்படுத்தும் வகையில், இந்தியாவின் மிகப்பெரிய புளி சந்தையான ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சிக்கு அடுத்து தமிழகத்திலேயே மிகப் பெரிய சந்தையாகக் கிருஷ்ணகிரி பழையபேட்டை புளி சந்தை உள்ளது.
இங்கு வாரந்தோறும் வியாழன் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் சந்தை கூடுகிறது. சந்தைக்கு என தனி இடவசதிகள் இல்லாத நிலையில், சந்தை கூடும் நாட்களில் சாலைகளில் மூட்டை மூட்டையாக விற்பனைக்கு புளி அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.
விலை நிர்ணயம்: இச்சந்தையின் விலை நிர்ணயத்தை வைத்து தான் ராஞ்சி மற்றும் மத்திய பிரதேசம் ஜபல்பூர் புளி சந்தைகளில் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றது. இந்நிலையில், புளியைச் சேமிக்க நவீன வசதிகளுடன் குளிர்பதன கிடங்கு அமைத்துத் தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இது தொடர்பாக புளி விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 லட்சத்துக்கும் அதிகமாக புளிய மரங்கள் உள்ளன. இங்கு ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 30 ஆயிரம் டன்னுக்கு மேல் புளி அறுவடை கிடைக்கின்றது.
ஏற்ற இறக்கத்தில் விலை: புளியின் விலையைப் பொறுத்தவரை ஏற்ற இறக்கத்தில் உள்ள நிலையில் ஏப்ரல் முதல் ஜூன் வரையான சீசன் காலங்களில் புளியை இருப்பு வைக்க அரசு சார்பில் குளிர் பதன கிடங்குகள் இல்லை.
எனவே, கிருஷ்ணகிரியை மையமாக கொண்டு 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் மெட்ரிக் டன் வரை புளியை இருப்பு வைக்கும் வகையில் அதிநவீன வசதிகளுடன் கூடிய குளிர் பதன கிடங்கு அமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT