Published : 15 Feb 2023 06:43 AM
Last Updated : 15 Feb 2023 06:43 AM

செங்கல்பட்டு | தி.மலை ஏடிஎம் கொள்ளை சம்பவம் எதிரொலி: செங்கை வங்கி அதிகாரிகளுடன் மாவட்ட எஸ்.பி. ஆலோசனை

செங்கல்பட்டு: திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளைச் சம்பவத்தை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்திலும் ஏடிஎம் மையங்களின் பாதுகாப்பு குறித்து காவல் கண்காணிப்பாளர் வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் வங்கி ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து ரூ.72 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. இதுதொடர்பாக வங்கி மேலாளர்களுடன் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு, காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். இதில் 51 வங்கிகளைச் சேர்ந்த மேலாளர்கள் மற்றும் வங்கி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனையில் வங்கி மற்றும் ஏடிஎம் மையங்களில் உள்ள பணத்தைக் கண்காணிக்கவும், மறைமுகமான கேமராக்கள் நிறுவப்பட வேண்டும் எனவும் இதில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கொள்ளையர்கள் உள்ளே புகுந்து ஏடிஎம் இயந்திரத்தை உடைக்கும் பட்சத்தில் வங்கியில் மட்டும் அலாரம் ஒலி எழுப்புவது மட்டுமில்லாமல் அருகில் உள்ள காவல் நிலையத்திலும் அலாரம் எழுப்புவதற்கான வழிவகைகள் செய்ய வேண்டும் என சைலேந்திரபாபு அறிவுறுத்தியிருந்தார்.

இதன் தொடர்ச்சியாக செங்கல்பட்டில் மாவட்ட காவல் கண்காணிப் பாளர் பிரதீப் தலைமையில், செங்கல்பட்டு நகர மற்றும் தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியிலுள்ள ஏடிஎம் மையங்களுக்கு வங்கி சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து 25வங்கிகளைச் சேர்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் ஏடிஎம் மையங்களில் உள்ளஅலாரம் ஒலி, சிசிடிவி கேமாராக்கள், காவலாளிகள் குறித்தும் அது செயல்படும்விதம் குறித்தும் கேட்டறிந்தார். மேலும் முக்கிய பாதுகாப்பு பணிகள் குறித்து வங்கி அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆலோசனை வழங்கினார். மேலும் டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்திய முக்கிய அறிவுரைகளும் வங்கி அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கூடுதல் மாவட்ட காவல் கண் காணிப்பாளர் பொன்ராம், மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் (குற்றப்பிரிவு) செந்தில், நகர காவல் ஆய்வாளர் வடிவேல் முருகன் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் மற்றும் வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x