Last Updated : 15 Feb, 2023 02:49 PM

 

Published : 15 Feb 2023 02:49 PM
Last Updated : 15 Feb 2023 02:49 PM

புதுச்சேரியில் போக்குவரத்து விதி மீறல்களுக்கு இ-சலான் கருவி மூலம் இனி அபராதம்

புதுச்சேரி: புதுச்சேரியில் போக்குவரத்து விதி மீறலில் ஈடுபடுவோரிடம் ‘இ-சலான்’ கருவியை பயன்படுத்தி அபராதம் வசூலிக்கும் நடைமுறையை போக்குவரத்து துறை மற்றும் போக்குவரத்து காவல்துறை அடுத்த வாரம் முதல் தொடங்கவுள்ளது.

புதுச்சேரியில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப போக்குவரத்து விதி மீறல்களும் அதிகரித்துள்ளன. போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு தற்போது கையால் எழுதி தந்தோ, கையடக்க கருவி மூலமாகவோ சலான் வழங்கப்படுவதும், ஸ்பாட்பைன் வசூலிப்பதும் நடைமுறையில் உள்ளது.

இந்த நடைமுறையில் தேவையற்ற காலதாமதம் ஏற்படுகிறது. போக்குவரத்து விதிமுறையை மீறுபவர்களிடம் கையில் பணம்இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் அபராதம் வசூலிப்பதில் சிக்கல்கள் உள்ளன. தொடர்ந்து போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் குறித்த விவரங்களை சேகரிப்பதும் முடியாமல் போகிறது.

இவற்றுக்கு தீர்வு காணும் வகையில் ‘இ-சலான்’ கருவி மூலமாக ‘ஸ்பாட் பைன்’ வசூலிக்கும் நடைமுறை புதுச்சேரியில் அடுத்த வாரம் முதல் அமலுக்கு வர உள்ளது. இதற்காக புதுச்சேரி போக்குவரத்து துறையில் 50 ‘இ-சலான்’ அதி நவீன கருவிகள் வாங்கப்பட்டுள்ளன. இவற்றில் 35 கருவிகள் போக்குவரத்து போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. மீதமுள்ள 15 கருவிகள் போக்குவரத்து துறை அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்படும்.

இது குறித்து போக்குவரத்து துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: போக்குவரத்து விதிமீறல்களை தடுக்க ‘இ-சலான்’ கருவி மூலம்அபராதம் வசூலிக்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது. இந்த ‘இ-சலான்’ கருவி அனைத்து வாகன லைசன்ஸ்கள் தொடர்பான புள்ளி விவரங்கள் அடங்கிய சாரதி ஆப், அனைத்து வகையான வாகனங்கள் குறித்த விவரங்கள் அடங்கிய ‘வாஹன் ஆப்’ ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டிருக்கும்.

போக்குவரத்து விதிகளை மீறும் நபரின் ஓட்டுநர் உரிம எண் அல்லது சம்மந்தப்பட்ட வாகனத்தின் பதிவு எண்ணை ‘இ-சலான்’ கருவியில் பதிவு செய்யும்போது, அவருடைய அனைத்து விவரங்களும் இவற்றில் பதிவாகி விடும். இதன் மூலம் சம்மந்தப்பட்ட நபர் ஏற்கெனவே போக்குவரத்து விதிமீறலுக்கு அபராதம் செலுத்தி இருந்தால், எவ்வளவு தொகை செலுத்தி உள்ளார், தேதி, நேரம், ஓட்டி வந்த வாகனத்தின் விவரம், ஓட்டுநர் உரிமத்தின் எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் எளிதாக தெரிந்து விடும்.

மீண்டும் அந்த நபர் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டால் முதலில் வசூலிக்கப்பட்ட அபராதத்தை விட இரு மடங்கு அபராதம் வசூலிக்கப்படும். உதாரணமாக ஹெல்மெட் அணியாமல் முதலில் விதி மீறலில் ஈடுபட்டால் ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும். அடுத்தமுறை அதே நபர் விதி மீறலில் ஈடுபட்டால் ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை அபராதம் வசூலிக்கப்படும்.

இதுபோல் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள், அதிவேகமாக வாகனங்களை இயக்குவோர் உள்ளிட்ட அனைத்து போக்குவரத்து விதிமீறல்களுக்கும் அபராதம் இருமடங்காக விதிக்கப்பட்டு வசூலிக்கப்படும். தொடர்ந்து போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள், கடுமையான குற்றங்களில் ஈடுபடுபவர்களின் விவரங்களை அறிந்து, சம்பந்தப்பட்ட நபரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்ய முடியும்.

மேலும் ‘இ-சலான்’ நடைமுறை அமலுக்கு வரும்போது பணமாக மட்டுமல்லாமல், அபராத தொகையை டெபிட், கிரடிட் கார்டு மூலமாகவும் கட்டலாம். க்யூஆர் கோடு ஸ்கேன் செய்தும், ஜிபே போன்ற மொபைல் ஆப் மூலமாகவும் பணம் செலுத்தலாம். கையில் பணம் இல்லாவிட்டால், வீட்டுக்கு சென்று ஆன்லைன் முறையிலும் அபராத தொகையை செலுத்த முடியும்.

அவ்வாறு செலுத்தாதவர்களை எளிதாக கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ‘இ-சலான்’ மூலம் வசூலிக்கப்படும் அபராதம் போக்குவரத்து துறையின் தனி கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டு, சாலை பாதுகாப்பு திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x