Published : 02 May 2017 07:55 AM
Last Updated : 02 May 2017 07:55 AM

வண்டலூர், குமிழி காப்புக்காட்டில் கடும் வறட்சி: குடிநீர் தேடி ஊருக்குள் நுழையும் மான்கள்

வண்டலூர் மற்றும் குமிழியிலில் காப்புக்காடு உள்ளது. இந்த காட்டில், மான், குள்ளநரி, முள்ளம்பன்றி, முயல், காட்டுப்பன்றி, உடும்பு போன்ற அரிய வகை விலங்கினங்களும், மயில் போன்ற பாதுகாக்கப்பட வேண்டிய பறவைகளும் அதிகம் உள்ளன. இந்த காப்புக்காட்டில் விலங்குகள் தண்ணீர் குடிக்க, வனத்துறை சார்பில், தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த நீரை விலங்குகள் குடித்து வந்தன. தற்போது கடும் வறட்சி நிலவுகிறது. இதனால், வனத்தில் வாழும் விலங்குகள் உணவும், குடிநீரும் இன்றி தவிக்கின்றன.

இதனால், காட்டு வனத்தில் வாழும் விலங்கினங்கள் உணவை தேடியும், குடிநீரை தேடியும், அருகில் உள்ள கிராம குடியிருப்பு பகுதியில் நுழைந்து வருகிறது. குறிப்பாக, மான்கள் அதிக அளவில் காட்டை விட்டு வெளியேறி, கிராமத்துக்குள் நுழையும்போது, அதை நாய்கள் துரத்தி கடிப்பதும், நாய்களிடம் இருந்து தப்பிக்கும்போது, மான்கள் கிணற்றில் விழுந்து இறப்பதும், அடிக்கடி நடந்து வருகிறது. மேலும், சாலையை கடக்கும்போது, வாகனங்கள் மோதி, மான்கள் இறக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கின்றன. இப்படி பல மான்கள் இறந்துள்ளன. குடியிருப்பு பகுதிக்கு வரும் மான்கள் குறித்து, ஒரு சிலர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்து, அடிபட்ட மானை வனத்துறையினரிடம் ஒப்படைத்துவிடுகின்றனர். இதனால் வண்டலூர், குமிழி காப்புக்காடு பகுதியில் நாளுக்கு நாள், மான்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது.

இந்நிலையில், நேற்று காலை, கூடுவாஞ்சேரியை அடுத்த கன்னி வாக்கம் கிராம வனப் பகுதியில் இருந்து புள்ளி மான் ஒன்று தண்ணீர் தேடி அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்கு வந்தது. இதனைக் கண்ட தெருநாய்கள் அந்த புள்ளி மானை துரத்தி கடித்தன. மானின் அலறல் சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் நாய்களிடம் இருந்து புள்ளி மானை காப்பாற்றினர். பின்னர் தாம்பரம் வனத்துறைக்கு தகவல் தந்தனர். உடனே விரைந்து வந்த வனக்காவலர்கள் மானை மீட்டு வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒப்படைத்தனர். காயம் அடைந்த மானுக்கு பூங்கா மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

வண்டலூர், குமிழி காப்புக்காட்டில், அதிக தொட்டி கட்டி அதில், தண்ணீர் விட்டால் வனவிலங்குகள், கிராமம் மற்றும் நகரை நோக்கி வந்து இறக்கும் சம்பவங்களை குறைக்க முடியும் என, இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

அவ்வப்போது மான்கள் ஊருக்குள் நுழைந்து விபத்தில் சிக்கியும், நாய் களிடம் சிக்கியும் இறக்கிறது. விலங்கு கள் குடியிருப்பு பகுதிகளுக்கு வராமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. தண்ணீர் இல் லாத பகுதியில் குடிநீர் தொட்டி அமைத்து அதன் மூலம் தண்ணீர் வழங்கப்படுகிறது. இரண்டு நாட் களுக்கு ஒரு முறை எங்கள் ஊழியர்கள் தொட்டியில் தண்ணீர் உள்ளதா என ஆய்வுகள் மேற்கொள்கின்றனர் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x