Published : 14 Feb 2023 08:12 PM
Last Updated : 14 Feb 2023 08:12 PM

பிபிசி ரெய்டு | எதிர்வரும் தேர்தல்களில் பாஜகவுக்கு மக்கள் தக்க பாடத்தை புகட்டுவர்: முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலின் | கோப்புப்படம்

சென்னை: "அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை உள்ளிட்ட அமைப்புகள் அரசியல் கருவிகளாக அரசியல் எதிரிகளைத் குறிவைத்துத் தாக்குவதற்கு அளவுகடந்து பயன்படுத்தப்படுகின்றன. இந்தக் கருவிகளின் பட்டியலில் பிபிசி நிறுவனத்தில் நடத்தப்பட்ட வருமான வரி "சர்வே"-யும் புதிதாக இணைந்துள்ளது" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில், "எந்தவொரு துடிப்பான ஜனநாயகத்துக்கும், வெளிப்படைத் தன்மையோடும் சுதந்திரமாகவும் செயல்படும் அமைப்புகள் இன்றியமையாதவை. ஆனால், பாஜக தலைமையிலான தற்போதைய ஒன்றிய அரசின்கீழ் நாட்டின் மதிப்புக்குரிய அமைப்புகள் ஒருதலைப்போக்காகக் செயல்படுவதோடு அவற்றின் சுதந்திரத்தன்மையையும் முற்றிலுமாக இழந்துவிட்டன.

அண்மைக்காலமாக, அமலாக்கத் துறை, சிபிஐ, வருமானவரித் துறை உள்ளிட்ட அமைப்புகள் அரசியல் கருவிகளாக அரசியல் எதிரிகளைத் குறிவைத்துத் தாக்குவதற்கு அளவுகடந்து பயன்படுத்தப்படுகின்றன. இந்தக் கருவிகளின் பட்டியலில் பிபிசி நிறுவனத்தில் நடத்தப்பட்ட வருமான வரி "சர்வே"-யும் புதிதாக இணைந்துள்ளது.

மக்கள் அளித்த ஆட்சி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, இந்திய ஜனநாயகத்தையும், ஊடகச் சுதந்திரத்தையும் பாழடித்து வருவதற்குக் காரணமானவர்கள், நடப்பவை அனைத்தையும் மக்கள் அமைதியாகப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதையும், எதிர்வரும் தேர்தல்களில் இதற்கான தக்க பாடத்தை அவர்கள் புகட்டுவார்கள் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி செய்தி நிறுவன அலுவலகங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் செவ்வாய்கிழமை அதிரடியாக கணக்குகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

இது குறித்து வருமான வரித்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இது சோதனை அல்ல என்றும், கணக்கு ஆய்வு என்றும் தெரிவித்துள்ளனர். தாங்கள் மேற்கொண்ட இந்த ஆய்வில், பரிமாற்ற விலை விதிகளை பிபிசி மீறி இருப்பது தெரிய வந்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

பிபிசி தங்கள் வருமானத்தை மடைமாற்றுவது நீண்ட காலமாக இருந்து வருவதாகவும், இது குறித்து வருமானவரித் துறை பலமுறை அறிக்கை அனுப்பி உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், பிபிசி தொடர்ந்து இந்த விதிமீறலில் ஈடுபட்டு வந்ததால், இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x