Published : 14 Feb 2023 07:03 PM
Last Updated : 14 Feb 2023 07:03 PM
சென்னை: தனியார் எஸ்டேட்டில் அந்நிய மரங்களை வளர்க்க தடை விதித்தும், மரங்களை அகற்றவும் வலியுறுத்தி அறிவிப்பாணை வெளியிட தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு குறித்த வழக்குகள் நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.
அப்போது அரசுத்தரப்பில், "அந்நிய மரங்கள் குறித்து அறிக்கை அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் 23 ஹெக்டேரில் 350 மெட்ரிக் டன் அந்நிய மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. முதுமலை சரணாலயத்தில் 20 ஹெக்டேர் பரப்பில் அந்நிய மரங்கள் அகற்றப்பட்டுள்ளன.
அப்போது மனுதாரர் தரப்பில், மலைப்பகுதியில் உள்ள தனியார் எஸ்டேட்டில் அந்நிய மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், மாநில அரசின் கொள்கைபடி தனியார் எஸ்டேட்டில் அந்நிய மரங்களை வளர்க்க தடை விதித்து, மரங்களை அகற்ற வலியுறுத்தி தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
மேலும், அகற்றப்படும் மரங்களை விற்பனை செய்து அதன்மூலம் கிடைக்கும் தொகையை வனத்தை சீரமைக்க பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தி, விசாரணையை மார்ச் 16ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT