Published : 14 Feb 2023 06:38 PM
Last Updated : 14 Feb 2023 06:38 PM
சேலம்: சேலத்தில் ‘ஆட்டோ நகரம்’ கொண்டு வரும் திட்டத்தை செயல்படுத்துவதாக முதல்வர் ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் கூறியதை நிறைவேற்றினால், 2 லட்சம் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைவர் என மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் (தமிழ்நாடு) தலைவர் தனராஜ் கூறியுள்ளார்.
சேலம் மாவட்டத்தில் பிரதான தொழில்களில் லாரி போக்குவரத்து தொழில் முக்கிய பங்காற்றி வருகிறது. திமுக எதிர்கட்சியாக இருந்த போது, கடந்த 2016ம் ஆண்டு தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த ஸ்டாலின், சங்ககிரியில் நடந்த திண்ணை பிரச்சாரத்தில் 'ஆட்டோ நகரம்' உருவாக்கப்படும் என உறுதி அளித்து சென்றார். கடந்த 2021-ம் ஆண்டு திமுக தேர்தல் வாக்குறுதியில் 'ஆட்டோ நகரம்' திட்டம் கொண்டு வருவதாக தெரிவித்திருந்தது. ஆனால், இத்திட்டத்துக்கான ஆயத்தபணிகள் கூட இதுவரை நடைபெறாததால், லாரி உரிமையாளர்கள், தொழில் வளர்ச்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் தனராஜ் கூறியது: ''தமிழகத்தில் சேலம், நாமக்கல் மாட்டங்களில் லாரி தொழிலில் பிரதானமாக விளங்கி வருகிறது. இவ்விரு மாவட்டங்களிலும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் இயங்கி வருகிறது. சேலம் மாவட்டத்தில் மட்டும் 10 ஆயிரம் லாரிகள் உள்ளன.
இந்த லாரிகள் செவ்வாய்ப்பேட்டையில் மார்க்கெட்டில் நிறுத்த போதுமான இடவசதியின்றி, திருவாகவுண்டனூரில் இருந்து சீலநாயக்கன்பட்டி பை-பாஸ் சர்வீஸ் சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, புதிய இடத்தில் லாரி மார்க்கெட் இயங்க இடம் தேர்வு செய்து ஒதுக்க வேண்டும்.
அதேபோல, முதல்வர் ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் கூறியதன் அடிப்படையில், சேலத்தில் 'ஆட்டோ நகரம்' உருவாக்கிட வேண்டும். 'ஆட்டோ நகரம்' ஏற்படுத்துவதன் மூலம் லாரி ஸ்டாண்ட், மெக்கானிக் ஷாப், பெயின்ட்டிங், டிங்கரி, மெக்கானிக் ஷெட், லாரி சர்வீஸ் சென்டர், புக்கிங் அலுவலகம், சரக்கு ஏற்றுதல் என சகல வதிகளும் ஒரே இடத்தில் கிடைத்துவிடும். இதன் மூலம் லாரி தொழில் வளர்ச்சிக்கு அடித்தளமிட வாய்ப்பு ஏற்படும். தற்போது, சர்வீஸ் சாலைகளில் நிறுத்தப்படுள்ள லாரிகளில் இருந்து பேட்டரி, டீசல் உள்ளிட்டன மர்ம நபர்கள் திருடி செல்வதால், உரிமையாளர்கள் நஷ்டமடைந்து வருகின்றனர்.
லாரி தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் இரண்டு லட்சம் குடும்பத்தினர் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் கூறியதை போன்று, சேலத்தில் 'ஆட்டோ நகரம்' ஏற்படுத்துவதன் மூலம் இரண்டு லட்சம் குடும்பத்தினர் மகிழ்வடைவர்.
அதேபோல, ஆன்-லைன் அபாராத விதிப்பில் பல்வறு குளறுபடிகள் நிகழ்வதால், லாரி உரிமையாளர்கள் தேவையில்லாமல் அபராத கட்டணம் கட்ட வேண்டிய நிலைக்கு உள்ளாகினர்.
எனவே, ஆன்-லைன் அபராத கட்டண விதிப்பை ரத்து செய்ய வேண்டும். சேலம் நகர பகுதியில் இருந்த 13 கிமீ., தொலைவில் தான் டோல் கேட் அமைக்க வேண்டும் என்பது விதி. ஆனால், பல ஆண்டாக விதிமுறை மீறி கருப்பூரில் டோல் கேட் செயல்பட்டு வருகிறது. அரசியல் கட்சியினரும், லாரி உரிமையாளர்களும் பல்வேறு கட்ட போராட்டம் நடத்தியும், இப்பிரச்சினைக்கு இதுவரை விடிவு பிறக்கவில்லை.
முதல்வர் ஸ்டாலின், லாரி உரிமையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்'' என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT