Published : 14 Feb 2023 04:41 PM
Last Updated : 14 Feb 2023 04:41 PM
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில், அதிக வாக்குகளைப் பெற்று முதல்வரின் கவனத்தை ஈர்ப்பதில், அமைச்சர்களிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர், தேமுதிக கட்சிகளின் வேட்பாளர்களுக்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் களைகட்டியுள்ளது. திமுக கூட்டணியில் போட்டியிடுவது காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் என்றாலும், திமுக வேட்பாளரே போட்டியிடுவது போல், அமைச்சர்கள் படை தேர்தல் பணி ஆற்றி வருகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் அமைக்கப்பட்ட கூடாரங்களில், வாக்காளர்களை அமர வைத்து, கதை பேச வைத்து, கடைசியில் ‘கவனித்து’ அனுப்பும் திமுகவின் ‘ஈரோடு ஃபார்முலா’விற்கு வாக்காளர்களிடையே வரவேற்பும், எதிர்கட்சியினரிடையெ எதிர்ப்பும் எழுந்துள்ளது.
சாதி வாரியாக அமைச்சர்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின், உதயநிதி தவிர துரைமுருகன் உள்ளிட்ட அத்தனை அமைச்சர்களும் ஈரோடு கிழக்கில் முகாமிட்டுள்ளனர். சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் பகுதியில் அமைச்சர்கள் நாசர், மஸ்தான் ஆகியோரும், ஆதிதிராவிடர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் அந்தியூர் செல்வராஜ், அமைச்சர் கயல்விழியும், நாடார்கள் வசிக்கும் பகுதியில் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் போன்றோரும், கவுண்டர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் செந்தில்பாலாஜி, சாமிநாதன் என ஜாதி வாரியாக அமைச்சர்கள் ’வாக்கு வலை’ வீசி வருகின்றனர்.
‘இந்த தேர்தலில் எங்களுக்கும் அதிமுகவிற்கும் போட்டி இல்லை. ஒவ்வொரு பகுதிக்கும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்களுக்குள்தான், யார் பகுதியில் அதிக வாக்கு பெறுவார்கள் என்ற போட்டி உள்ளது. எனக்கு ஒதுக்கப்பட்டுள்ள அக்ரஹாரம் பகுதியில், 85 சதவீத வாக்கு பதிவானால், அதில் 80 சதவீதம் காங்கிரஸ் வேட்பாளருக்கு வாங்கித்தருவேன். இதை சவாலாக சொல்கிறேன்’ என நேற்று நடந்த தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் சவால்விட்டார் அமைச்சர் நாசர்.
10 வாக்குக்கு ஒரு பொறுப்பாளர்: ஒவ்வொரு 100 வாக்காளர்களுக்கும், ஒரு பொறுப்பாளர், அந்த பொறுப்பாளரின் கீழ் 10 பேர் நியமிக்கப்பட்டு, ஒவ்வொரு 10 வாக்குகளுக்கும் ஒருவர் என திமுக தேர்தல் பணி செயல்திட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த 10 பேரிடமும் தினமும் பேசி, அவர்களது வாக்கை உறுதி செய்ய தேவையான ‘எல்லா’ பணிகளையும், அந்த பொறுப்பாளர் ஏற்க வேண்டும். இதனை கண்காணிக்க பலமட்டங்களில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதோடு ஐடி விங் பிரிவைச் சேர்ந்த இளைஞர்களும் தேர்தல் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர்.
‘ஒவ்வொரு வாக்கும் நமக்கு முக்கியம். வெளியிடங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் சென்றவர்களைக் கணக்கெடுத்து, அவர்களை போனில் பேசி, தேர்தலுக்கு இங்கு வருவதை உறுதி செய்ய வேண்டும். இரண்டு வாக்கு உள்ள குடும்பம், மூன்று வாக்கு உள்ள குடும்பம், நான்கு வாக்கு உள்ள குடும்பம் என தனித்தனியாக கணகெடுத்து வைத்துள்ளோம். வெளியூரில் வசிப்போருக்கு அமைச்சர்களே வீடியோ அழைப்பில் பேசி வாக்கு சேகரிக்கின்றனர்’ என தேர்தல் பணிகளை விளக்கியுள்ளார் அமைச்சர் அன்பில் மகேஷ்.
நாசர் சொன்ன ராஜா கதை: அமைச்சர் நாசர் சொன்ன ராஜா கதை, பல்லுக்கும் நாக்குக்கும் சண்டை வந்தால் என்ன நடக்கும் என்ற கதைகளையெல்லாம் அமைச்சர் நேரு உள்ளிட்டவர்களே வியந்து கேட்டனர். அதோடு, ‘ராஜாஸ்தான் மாநிலத்தில் தேர்தல் நடந்தபோது, காங்கிரஸ் சார்பில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஜோஷி, ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இதில், சோகம் என்னவென்றால் ஜோஷியின் தாய், சகோதரி, கார் ஒட்டுநர் மூவரும் வாக்களிக்கத் தவறி விட்டனர். அவர்கள் மட்டும் வாக்களித்து இருந்தால், ஜோஷி வெற்றி பெற்று இருப்பார்’ என சுவாரஷ்யமான தேர்தல் கதையைச் சொன்னார் அமைச்சர் நாசர்.
ஈரோடு கிழக்கு தொகுதியின் முக்கிய தளபதியாக செயல்படும் அமைச்சர் நேருவோ, ‘நான் 1989-ல் மணப்பாறை இடைத்தேர்தல் முதல், இதுவரை 40-க்கும் மேற்பட்ட இடைத்தேர்தல்களில் வேலை பார்த்து விட்டேன். இந்த இடைத்தேர்தலைப் போல வேறு எங்கும் பார்க்கவில்லை. இங்கு, 20 ஆயிரம் வாக்காளர்கள் வெளியிடங்களில் வசிக்கின்றனர். அவர்களை கண்டறிந்து கூட்டி வருவதோடு, அவர்கள் பெயரில் வேறு யாராவது வாக்களித்து விடவும் அனுமதித்து விடக்கூடாது’ என்று தனது அனுபவத்தை பதிவு செய்தார்.
பிரச்சாரத்தில் கலகலப்பு: தேர்தல் பணி பார்ப்பவர்களுக்கு என்ன தேவை இருந்தாலும், உரிய சேனலில் கவனத்திற்கு கொண்டு வந்தால், உடனடியாக நிறைவேற்றப்படும் என்ற உறுதியும் திமுக பூத் முகவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
வாக்கு கேட்க செல்லும் அமைச்சர்கள் பரோட்டா போட்டும், வடை சுட்டும், டீ போட்டுக் கொடுத்தும் கலகலப்பை ஏற்படுத்தி வருகின்றனர். ஆளுங்கட்சியினரின் உபசரிப்பும், கவனிப்பையும் கண்டு மிரண்டு போயுள்ள ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள், திரையரங்குகளில், ‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு?’ என்ற குரலுடன் திரையிடப்படும் புகைக்கு எதிரான விளம்பரப் பட வசனத்தை மவுனமாக பேசிக் கொண்டு இருக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT