Published : 14 Feb 2023 11:30 AM
Last Updated : 14 Feb 2023 11:30 AM

அதானி விவகாரத்தில் பாஜக மீதான நேரடி குற்றச்சாட்டு விசாரிக்கப்பட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

உங்களின் ஒருவன் தொடரில் பதில் அளித்த முதல்வர்

சென்னை: கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் மணிக்கணக்கில் எவ்வாறு பேசுவது என்பதை பிரதமர் மோடியின் பதிலுரை பார்த்து தெரிந்து கொண்டேன் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நடப்பு நிகழ்வுகள் குறித்து சமூக வலைத்தளங்களிலும் மக்கள் உள்ளங்களிலும் எழும் கேள்விகளுக்கு, திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் பதில் அளிக்கும் ‘உங்களில் ஒருவன் பதில்கள்' தொடரின் இரண்டாவது பாகம் இன்று (பிப்.14) வெளியானது. அதிலிருந்து சில கேள்வி பதில்கள்.

நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய பதிலுரை பற்றி உங்கள் பார்வை என்ன?

யார் கேட்ட கேள்விக்கும் பதில் சொல்லாமல், மணிக்கணக்கில் எவ்வாறு பேசுவதை என்பதை நான் தெரிந்து கொண்டேன். பாஜக ஆட்சி மீதும், பிரதமர் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகிறது. அது எதற்குமே பிரதமர் பதில் சொல்லவில்லை. 'நாட்டு மக்கள் எனக்குக் கவசமாக இருக்கிறார்கள்' என்பதை மக்கள் சொல்லவில்லை, அவராகச் சொல்லிக் கொள்கிறார். 'சேறு வீசுங்கள் - தாமரை மலரும்' என்று சொல்லி இருக்கிறார் பிரதமர்.

நீர்நிலைகளில் மலரும் பூதான் தாமரை. அதற்காக தண்ணீர் உள்ள எல்லா இடத்திலேயும் மலர்ந்துவிடாது. சேறு இருக்கிற இடமெல்லாம் மலர்ந்துவிடாது. இவ்வாறு வார்த்தை ஜாலங்கள்தான் அவரது உரையில் இருந்ததே தவிர, பிபிசி ஆவணப்படம் பற்றியோ, அதானி விவகாரம் குறித்தோ அவர் விளக்கம் அளிக்கவில்லை. நாட்டுக்கு கொடுத்த வாக்குறுதியில் எதை நிறைவேற்றி இருக்கிறோம் என்று பிரதமர் வரிசைப்படுத்தவில்லை.

சேது சமுத்திர திட்டம், நீட், மாநில உரிமைகள், ஆளுநரின் தலையீடுகள், ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காதது என எத்தனையோ கேள்விகளை திமுக உறுப்பினர்கள் கேட்டார்கள். அதற்கும் பிரதமர் உரையில் பதில் இல்லை. குறிப்பாக தமிழ்நாட்டுக்குச் சொல்ல பிரதமரிடம் எதுவுமே இல்லை

திமுக ஆட்சியைக் கலைத்த காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்கலாமா என்று கேட்கிறாரே பிரதமர்?

பாஜக ஆட்சியைக் கவிழ்த்த அதிமுக.,வோடு கூட்டணி வைத்திருக்கிறவர் இதைக் கேட்கலாமா?

ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ஏற்படும் உயிரிழப்புகள் தொடர்கிறது. ஆனால் அதற்கான தடைச் சட்டத்திற்கு ஒப்புதல் கொடுக்காமல் ஆளுநரின் பிடிவாதமும் தொடர்கிறதே?

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் சிக்கி மீள முடியாமல் தற்கொலை செய்துகொள்பவர்களைப் பற்றிய செய்திகள் தினந்தோறும் நாளிதழ்களில் வருகின்றன. தன்னுடைய மகன் ஆன்லைன் ரம்மி விளையாடுவதற்காக வேலை பார்த்த கம்பெனியில் பணத்தைக் கையாடல் செய்திருக்கிறான் என்று தெரிந்து அவனது அம்மா தற்கொலையே செய்து கொண்டார். சென்னை வியாசர்பாடியில்தான் இது நடந்திருக்கிறது. மகன் தலைமறைவாகிட்டான். இது ஒரு சம்பவம்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த ரியாஸ் கான் என்பவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்திருக்கிறார். காவிரி ஆற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டார். இது இரண்டாவது சம்பவம். சேலம் மாவட்டம் ஆத்தூர் உடையார்பாளையத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பிரபு, தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இது மூன்றாவது சம்பவம். மதுரையில் குணசீலன் என்கிற கல்லூரி மாணவன் தற்கொலை செய்து கொண்டார்.

இவை அனைத்தும் கடந்த ஒரு வாரத்திற்குள் நடந்தவை. இவை எல்லாம் தமிழக ஆளுநருக்குத் தெரியவில்லையா? இன்னும் எத்தனை உயிர்கள் பலியானால் அவர் கையெழுத்து போடுவார்? இவ்வாறு ஒரு சட்டம் கொண்டு வர வேண்டும் என்று உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம். அதன்படி உரிய சட்டத்தை ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பிய சட்டமன்றத்தை அவமதிக்கிறார் ஆளுநர். அமைச்சரவை அனுப்பிய அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்த ஆளுநர், அதே சட்டத்தை சட்டமன்றம் மூலமாக நிறைவேற்றி அனுப்பினால் 3 மாதமாக ஒப்புதல் வழங்காமல் இருப்பதுதான் மர்மமாக இருக்கிறது.

இதில் என்ன கொடுமை என்றால் ஆன்லைன் விளையாட்டுகளில் வெல்லக் கூடிய தொகைக்கு வரி போடுவதுதான். ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் இது இருக்கிறது. ஆன்லைன் விளையாட்டுகளைத் தடை செய்யாமல் அதை அங்கீகரிக்கிற வகையில் வரி போடுகிற இவர்களை என்ன சொல்வது?

மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டு இருப்பதாகக் கருதுகிறீர்களா?

ஆமாம்! ஆமாம்! இவர்கள் தமிழகத்திற்கு அறிவித்த ஒரே ஒரு திட்டம் எய்ம்ஸ் மருத்துவமனை மட்டும்தான். அதைக் கட்டுவதற்கு ஜப்பான் நாட்டு நிதி உதவியைக் கேட்டிருப்பதாக சொன்னார்கள். ஜப்பான் நாட்டு நிதி உதவி வரவில்லை. இவர்களாவது ஒதுக்கி இருக்கிறார்களா என்று கேட்டால் அதுவும் இல்லை. தமிழகத்தை புறக்கணிப்பது இதன் மூலம் தெரியவில்லையா?

அதானி குழுமத்திற்கு எதிராக வந்துள்ள அறிக்கை பற்றி நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கோ, நாடாளுமன்ற விவாதத்திற்கோ மத்திய அரசு தயாராக இல்லாமல் இருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?

அதானி குழுமத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் பா.ஜ.க அரசின் மீதான நேரடியான குற்றச்சாட்டுகளாக இருக்கிறது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வே சீரியஸாக விசாரிக்கிறது. எனவே, இதைப் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும். அதேபோல், நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணைக்கும் உத்தரவிடப்பட வேண்டும். ராகுல் காந்தி எழுப்பியுள்ள கேள்விகள் ஆணித்தரமானவை. இதை பற்றி ஒரு வார்த்தை கூட பிரதமர் பதிலளிக்காதது அதிர்ச்சியாக இருக்கிறது.

ராகுல் காந்தி, கார்கே போன்றவர்களது பேச்சுகளை நாடாளுமன்ற அவைக்குறிப்பில் இருந்து நீக்கி இருக்கிறார்களே?

இது நாடாளுமன்ற ஜனநாயக மரபுகளுக்கு எதிரான செயல். அவைக் குறிப்பில் இருந்து நீக்குவதால் மக்களின் மனங்களில் இருந்து நீக்கிவிட முடியாது.

அமலாக்கத்துறைதான் எதிர்க்கட்சிகளை இணைத்திருக்கிறது என்று பிரதமர் பேசியிருப்பது ஆரோக்கியமான அரசியலா?

அமலாக்கத்துறை எதற்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதற்கான பிரதமரின் ஒப்புதல் வாக்குமூலம் இது. எதிர்க்கட்சிகளைப் பழி வாங்குகிறேன் என்று நாடாளுமன்றத்தில் முதல் முறையாக ஒரு பிரதமரே ஒப்புக் கொண்டிருக்கிறார். இது நாட்டுக்கும் நல்லது இல்லை. தன்னாட்சி அமைப்புகளுக்கும் நல்லது இல்லை. ஜனநாயகத்துக்கும் நல்லது இல்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x