Published : 14 Feb 2023 09:22 AM
Last Updated : 14 Feb 2023 09:22 AM

பழ.நெடுமாறனிடம் விசாரிக்க முடிவு: மத்திய, மாநில அரசுகளின் உளவு அமைப்புகள் தீவிர விசாரணை

சென்னை: விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளதாக பழ.நெடுமாறன் தெரிவித்ததை தொடர்ந்து, பிரபாகரன் தொடர்பான தகவல்களை மத்திய, மாநில உளவுப் பிரிவினர் மீண்டும் திரட்டி வருகின்றனர். இதுகுறித்து நெடுமாறன் மற்றும் அவரது ஆதரவாளர்களிடம் விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்று பழ.நெடுமாறன் நேற்று தெரிவித்தார். அவரது இந்த கருத்துக்கு இலங்கை ராணுவம் உடனடியாக மறுப்பு தெரிவித்தது.

இது ஒருபுறம் இருக்க, நெடுமாறனின் இந்த கருத்தை முழுமையாக புறந்தள்ளிவிட முடியாது என்பதால், பிரபாகரன் பற்றிய தகவல்களை மீண்டும் திரட்ட மத்திய உளவு பிரிவினர் உத்தரவிட்டுள்ளனர்.

பிரபாகரன் தொடர்பான தகவல்களை தமிழக க்யூ பிரிவு போலீஸாரும் திரட்டத் தொடங்கியுள்ளனர். தமிழக காவல் துறையின் உளவுப் பிரிவு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், அப்பிரிவு ஐ.ஜி. செந்தில்வேலன், க்யூ பிரிவு எஸ்.பி. கண்ணம்மாள் தலைமையிலான போலீஸார் மீண்டும் விசாரணையில் இறங்கியுள்ளனர். பிரபாகரன் மரணமடைந்ததாக ஏற்கெனவே திரட்டப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் மீண்டும் கையிலெடுக்கப்பட்டு புலனாய்வு நடத்தப்பட்டு வருகிறது.

பிரபாகரன் குறித்து வெளியிட்ட தகவல் தொடர்பாக நெடுமாறன் மற்றும் அவரது ஆதரவாளர்களிடம் விசாரணை நடத்தவும் உளவுப் பிரிவினர் முடிவு செய்துள்ளனர். நெடுமாறன் மற்றும் அவரது தொடர்புடையவர்களின் நடமாட்டம் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இலங்கை ராணுவம் திட்டவட்டமாக மறுப்பு: பிரபாகரன் உயிருடன் உள்ளதாக நெடுமாறன் கூறிய தகவலை இலங்கை ராணுவம் மறுத்துள்ளது.

இதுகுறித்து இலங்கை ராணுவ செய்தி தொடர்பாளர் ரவி ஹேரத் கூறியபோது, ‘‘இறுதி போரின்போது, 2009-ம் ஆண்டு மே 18-ம் தேதி பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார். அதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. பிரபாகரன் கொல்லப்பட்டதை டிஎன்ஏ ஆதாரம் மூலம் உறுதி செய்தோம். பிரபாகரன் உயிருடன் இருப்பதாக சொல்லப்படுவது தவறான தகவல்கள். இதில் சந்தேகமே இல்லை’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x