Published : 14 Feb 2023 05:03 AM
Last Updated : 14 Feb 2023 05:03 AM

50 ஆண்டுகளாக தொடரும் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் ரேடார் சேவை - தமிழகம் நோக்கி வரும் புயல்களை கணிப்பதில் பேருதவி

சென்னை துறைமுக கட்டிடத்தின் மேல் 1973-ம் ஆண்டு ரேடார் நிறுவும் பணியில் ஈடுபட்டுள்ள தொழில்நுட்ப பணியாளர்கள்.

சென்னை: வானிலை கணிப்பு முறை மற்றும் வானிலை தரவுகள் தொடக்க காலத்தில் இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களைப் பாதுகாக்க பயன்படுத்தப்பட்டதை விட, பெரும்பாலும் போர் உத்திகளை வகுக்கவே பயன்படுத்தப்பட்டு வந்தது.

முதல் மற்றும் 2-ம் உலகப் போரில் ஈடுபட்ட பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன், அமெரிக்கா, ஜெர்மன் உள்ளிட்ட நாடுகளின் படையெடுப்பு திட்டமிடலுக்கு வானிலைத் தரவுகள் பெரிதும் உதவின. இதனால் வானிலை ஆராய்ச்சிக்கு அந்நாடுகள் அதிக நிதியை செலவிட்டு வந்தன. அந்த ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டதுதான் ரேடார் கருவி. இக்கருவி முதலில் போர் விமானம் மற்றும் கப்பல்கள் இயங்கும் வேகம், இருக்கும் இடம் ஆகியவற்றைக் கண்டறிந்து தாக்கி அழிக்க பயன்படுத்தப்பட்டது. 2-ம் உலகப் போர் முடிவுக்கு வந்த பிறகு, ரேடார் கருவிகள் வானிலை கண்காணிப்பு, கணிப்பு மற்றும் தரவு சேகரிப்புக்காகப் பயன்படுத்தப்பட்டன. வானிலையைக் கணித்தல் மற்றும் வானிலை முன்னறிவிப்புகளை வழங்கும் சேவையில் ரேடார்களின் பங்கு அளப்பரியது.

இந்தியாவிலேயே முதன்முறையாக 1792-ம் ஆண்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் தான் வானிலை ஆய்வு மையம் நிறுவப்பட்டது. தற்போது தமிழகத்துக்கென சென்னை துறைமுகம், பள்ளிக்கரணை, ஸ்ரீஹரிகோட்டா, காரைக்கால் ஆகிய 4 இடங்களில் ரேடார்கள் இயங்கி வந்தாலும், முதன்முதலில் சென்னை வானிலை ஆய்வு மையத்துக்காக 1973-ம் ஆண்டு ஜன.5-ம்தேதி, சென்னை துறைமுக வளாகத்தில் ரூ.30 லட்சத்தில் ரேடார் நிறுவப்பட்டு, பயன்பாட்டுக்கு வந்தது. தற்போது 50 ஆண்டுகால சேவையை அது நிறைவு செய்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன், ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: இன்று வானிலை கணிப்புக்கென செயற்கைக்கோள் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்கள் இருந்தாலும், புயல்கள் கண்காணிப்புக்கு ரேடார் தரவுகளுக்கு ஈடு இணை இல்லை. ரேடார் எல்லைக்குள் (400 கிமீ ஆரம்) புயல் வந்துவிட்டால் புயலின் நகர்வு, காற்றின் வேகம், அவை கொண்டிருக்கும் மேகக் கூட்டங்கள், புயலின் வெளிச்சுற்று, தலை, கண், வால் பகுதிகள் போன்றவற்றை துல்லியமாகக் கண்டறிய முடியும். மேலும் மழைப் பொழிவு, அவற்றின் அடர்த்தி உள்ளிட்டவை குறித்தும் கணிக்க முடியும்.

கடந்த 2016-ம் ஆண்டு வார்தா புயல் சென்னை மாநகரைத் தாக்கியபோது, ரேடார் தரவுகளைக் கொண்டுதான் துல்லியமாகக் கணித்து, தமிழக அரசுக்கும், மக்களுக்கும் வானிலை முன்னறிவிப்புகள், எச்சரிக்கை தகவல்கள் வழங்கப்பட்டன. அதன் மூலம் ஏராளமான உயிர்கள் பாதுகாக்கப்பட்டன. அந்த அளவுக்கு ரேடார் தரவுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த ரேடாரின் தரவுகள், பொதுவாக தமிழகம் நோக்கி வரும் புயல்களை கணிக்க பேருதவியாக இருந்தன.

சென்னை வானிலை ஆய்வு மையத்தில் 1973-ம் ஆண்டு ஜன.5-ம் தேதி முதல் ரேடார் தகவல்கள் பெறப்பட்டு, வானிலை முன்னறிவிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. அன்று அனலாக் வகை ரேடார்கள் பயன்படுத்தப்பட்டன. அப்போது ரேடார் அலைகள் கேமரா மூலம் படம் எடுத்து, அந்தபடச்சுருள்களை கழுவி, அதன்மூலம் போட்டோ பிரின்ட் செய்துதான் தரவுகள் பெறப்பட்டன. அதன் பிறகு 2002-ல் எஸ்-பேண்டு, டாப்லர் வகை டிஜிட்டல் ரேடார் சென்னை துறைமுகத்தில் நிறுவப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. சென்னை துறைமுகத்தில் உள்ள ரேடார் சேவை 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. தற்போது இந்த ரேடார் 3டி வடிவிலும் வானிலை தரவுகளை வழங்கி வருகிறது. வரும் காலத்தில் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப மேலும் நவீன முறையில் தரவுகளை வழங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x