Published : 10 May 2017 08:18 AM
Last Updated : 10 May 2017 08:18 AM

2016-17-ல் 1 கோடி டிக்கெட் பண பரிவர்த்தனை தோல்வி: ஐஆர்சிடிசி முன்பதிவு மென்பொருள் மேம்படுத்தப்படுமா?

கடந்த 2016-17ல் ரயில் டிக்கெட் முன்பதிவின்போது 1 கோடியே 2 லட்சம் டிக்கெட்களுக்கான இறுதிக்கட்ட பணப் பரிவர்த்தனை தோல்வியடைந்துள்ளது. இதனால், பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை போக்க, ஐஆர்சிடிசியின் முன்பதிவு மென்பொருள் மேம்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

வெளியூர்களுக்கு செல்ல பெரும்பாலான மக்கள் ரயிலையே விரும்புகின்றனர். முக்கியமான நாட்களில் ரயில்களில் டிக்கெட் கிடைப்பது பெரும் சவாலாக இருக்கிறது. இந்திய ரயில்வே மூலம் இயக்கப்படும் 142 பிரிமியம் ரயில்கள், சிறப்பு ரயில்கள், வழக்கமான விரைவு ரயில்கள் போன்றவற்றுக்கு சுமார் 6 லட்சம் முன்பதிவுகள் தினமும் நடைபெறுகின்றன. நாடு முழுவதும் 758 முன்பதிவு மையங்களை ரயில்வே இயக்கி வருகிறது.

கணினி மற்றும் நவீன செல்போன் பயன்பாடு அதிகரித்துள்ளதால், சுமார் 65 சதவீதம் பேர் ஐஆர்சிடிசி இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். இணையதளத்தின் வேகத்தை அதிகரிக்கும் வகையில் புதியதாக 10 சர்வர்கள் நிறுவப்பட்டுள்ளன. இதனால், ஒரு நிமிடத்துக்கு 14 ஆயிரத்து 800 முன்பதிவுகளை வழங்கக் கூடிய அளவிலும், சுமார் 3 லட்சம் பயனாளிகள் ஒரே நேரத்தில் பல்வேறு தேவைகளுக்கு கையாள்வதற்கு ஏற்ற வகையிலும் தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டுள்ளது. சில சமயங்களில் இறுதிக்கட்ட பண பரிவர்த்தனையின் போது திடீரென தடங்கல்கள் ஏற்படுகின்றன. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

2016 -17- ம் ஆண்டில் ஒரு கோடியே 2 லட்சம் பரிவர்த்தனைகள் தோல்வியடைந்துள்ளன. இதற்கு முந்தைய ஆண்டைவிட இது 22 சதவீதம் அதிகமாகும். எனவே, ஐஆர்சிடிசி முன்பதிவு மென்பொருள் தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டும் என ரயில் பயணிகள் வலியுறுத்துகின்றனர்.

இது தொடர்பாக டிஆர்இயூ சங்கத்தின் துணைப் பொதுச் செயலாளர் மனோகரன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

ஐஆர்சிடிசி இணையதளத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளதே தவிர, டிக்கெட் பெறுவதற்கான இறுதிக்கட்ட பண பரிவர்த்தனையில் ஏற்படும் பிரச்சினையை தீர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த 2015 -16-ம் நிதியாண்டில் 83 லட்சத்து 64 ஆயிரம் டிக்கெட்களும், 2016-17-ம் நிதியாண்டில் ஒரு கோடியே 2 லட்சம் டிக்கெட்களும் பணப் பரிவர்த்தனையின் போது தோல்வி அடைந்துள்ளன. இதனால், ரயில் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றம் அடைவதோடு, கிடைக்காத டிக்கெட்களுக்கு செலுத்திய பணத்தை திரும்பப் பெற 5 நாட்கள் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, ஐஆர்சிடிசி முன்பதிவு மென்பொருளின் தரத்தை மேம்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இது தொடர்பாக ஐஆர்சிடிசி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு அதிகரித்துள்ளது. பணப் பரிமாற்றம் செய்யும் போது திடீரென தோல்வி ஏற்படுகிறது என பல்வேறு இடங்களில் இருந்தும் பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக டெல்லியில் உள்ள எங்களது தலைமை அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்துள்ளோம். இதற்கு தீர்வு காணும் வகையில் வங்கிகளுடன் நிர்வாகம் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தும். மேலும், இதற்கான மென்பொருளை மேம்படுத்துவது குறித்து நிர்வாகம் முடிவு செய்து அறிவிக்கும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x