Published : 14 Feb 2023 06:30 AM
Last Updated : 14 Feb 2023 06:30 AM

அரசியல் நோக்கங்களால் உண்மை பின்னுக்கு தள்ளப்பட்டுவிட்டது: ஆரோவில் ஆன்மிக மாநாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து

ஸ்ரீ அரவிந்தரின் 150வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, புதுச்சேரியை அடுத்துள்ள தமிழகப் பகுதியான ஆரோவில்லில் அறிவியல், ஆன்மிகம் மற்றும் மனித எழுச்சி பற்றிய மூன்று நாள் மாநாடு நேற்று தொடங்கியது. இதில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார். உடன் ஆளுநர் தமிழிசை உள்ளிட்டோர். படம்: எம்.சாம்ராஜ்

விழுப்புரம்: தற்போதைய காலச் சூழலில் மனிதநேயம் கேள்விக்குறியாகியுள்ளது. நம்மைச் சுற்றி தெளிவாக, அழகாக எதுவும் இல்லை. பல்வேறு அரசியல் நோக்கத்திற்காக உண்மை பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டது என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

அரவிந்தரின் 150-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, புதுச்சேரியை அடுத்துள்ள தமிழகப் பகுதியான ஆரோவில்லில் அறிவியல், ஆன்மிகம் மற்றும் மனித எழுச்சி பற்றிய மூன்று நாள் உலகளாவிய உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. ஆரோவில் செயலர் ஜெயந்தி ரவி வரவேற்றார். ஆரோவில் அமைப்பின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் ஆன்மிக சிந்தனையுடையவர்கள் பங்கேற்றனர்.

இம்மாநாட்டின் தொடக்க அமர்வில் ஆரோவில் தலைவரும், தமிழக ஆளுநருமான ரவி பங்கேற்று பேசியதாவது: உலகம் முழுவதும் தற்போது கடும் நெருக்கடியில் இருக்கிறது. நாம் அனைவரும் நமக்குள்ளே மோதிக் கொள்கிறோம். நம்மைச் சுற்றி இருப்பவர்கள், நமது சமுதாயம், சுற்றுச்சூழல் என அனைத்து மட்டத்திலும் நாம் மோதிகொள்கிறோம். இந்த மோதலின் உச்சம் நேரடி மற்றும் மறைமுக போராக மாறுகிறது.

மனிதர்கள் பணம் சம்பாதிப்பதில் உணர்ச்சிமிக்கவர்களாகிள்ளனர். மனித நேயம் கேள்விக்குறியாகியுள்ளது. நம்மைச் சுற்றி தெளிவாக, அழகாக எதுவும் இல்லை. பல்வேறு அரசியல் நோக்கத்திற்காக உண்மை பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டது. அறிவியல் என்பது ஆய்வகத்தில் சோதிப்பது அல்ல; அறிவாக சிந்திப்பது. வரலாற்றை படிப்பதோடு, அதனோடு நாம் பயணிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்வில், ஆரோவில் நிர்வாகக்குழு உறுப்பினரும் புதுவை துணை நிலை ஆளுநருமான தமிழிசை பேசியதாவது: தியானம் செய்வதால் மனது அமைதி பெறுகிறது. நம்முடைய உணர்வுகள் பண்படுகின்றன. அதிக ஆற்றலோடு, ஆக்கப் பூர்வமாக நாம் செயல்பட தியானம் உதவுகிறது. நம்முடைய நினைவாற்றலை, கவனத் திறனை தியானம் பலப்படுத்துகிறது. இந்த உண்மையை இளைஞர்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும் என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x