Published : 29 May 2017 09:06 AM
Last Updated : 29 May 2017 09:06 AM

36,345 நீர்நிலைகளில் வண்டல் மண் எடுக்க அனுமதி: இலவசமாக எடுத்துச் செல்லலாம் என தமிழக அரசு தகவல்

தமிழகம் முழுவதும் 36 ஆயிரத்து 345 நீர்நிலைகளில் வண்டல் மண் இலவசமாக எடுத்துக்கொள்ள விவசாயிகள், பொதுமக்களுக்கு தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:

தமிழகத்தில் நிலவும் வறட்சி யால், ஏரி மற்றும் நீர்நிலைகள் போதிய நீரின்றி வறண்டுள்ளன. இதைப் பயன்படுத்தி நீர் நிலைகளை தூர்வாரி, அதன் கொள்ளளவை அதிகப்படுத்தி வருங்காலத்தில் விவசாயப் பணிகளை மேம்படுத்த ‘குடிமராமத்து’ திட்டத்துக்கு புத்துயிர் அளிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக ரூ.100 கோடியில் 30 மாவட்டங்களில் ஆயிரத்து 519 பணிகள் செயல்படுத்தப் படுகின்றன. இத்திட்டத்தை கடந்த மார்ச் 13-ம் தேதி காஞ்சிபுரத்தில் முதல்வர் கே.பழனிசாமி தொடங்கி வைத்தார்.

மேலும், இந்த நிதியாண்டில் இத்திட்டத்துக்கு ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டு 2 ஆயிரத்து 85 பணிகள் எடுத்துக்கொள்ளப்பட உள்ளன.

மேலும், பெருகி வரும் தண்ணீர் தேவையை சமாளிக்க மழைநீரை வீணாக்காமல் சேமிக்க வேண்டியது அவசியமாகும். அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளான அணைகள், வாய்க்கால்கள் மற்றும் ஏரிகளில் படிந்துள்ள வண்டல் மண்ணை அகற்றி நீர் கொள்ளளவை மீட்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பராமரிப்பில் உள்ள ஏரி, கால்வாய், நீர்த்தேக்கங்களில் இருந்து தூர்வாரும் போது எடுக்கப்படும் வண்டல் மண் மற்றும் களிமண் விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்கள் மற்றும் பொது மக்கள் பயன்பாட்டுக்கு கட்டண மின்றி மாவட்ட ஆட்சித் தலைவர் ஒப்புதலுடன் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கி கடந்த ஏப்ரல் 24-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.

அதன்படி விவசாயிகள் நஞ்சை நிலங்களுக்கு ஒரு ஏக்கருக்கு 75 கன மீட்டருக்கு (25 டிராக்டர் லோடுகள்) மிகாமலும், புஞ்சை நிலங்களுக்கு ஒரு ஏக்கருக்கு 80 கன மீட்டர் (30 டிராக்டர் லோடுகள்) மிகாமலும் நீர்நிலைகளில் இருந்து வண்டல் மண் எடுத்துக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மண்பாண்ட தொழிலாளர்கள் கூடுதலாக 60 கன மீட்டருக்கு மிகாமல் களிமண்ணும், பொது மக்கள் தங்கள் சொந்த பயன் பாட்டுக்காக 30 கன மீட்டருக்கு மிகாமல் வண்டல், சவுடு, சரளை மண் ஆகியவற்றையும் கட்டணமின்றி எடுத்துச் செல்லலாம்.

இத்திட்டத்தின் கீழ் இதுவரை மாநிலத்தில் உள்ள 42 ஆயிரத்து 115 நீர்நிலைகளில் 36 ஆயிரத்து 345 நீர்நிலைகளில் இருந்து வண்டல் மண்ணை எடுத்துச் செல்ல மாவட்ட ஆட்சியர்களால் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தற்போது வரை 9 ஆயிரத்து 986 நீர்நிலைகளில் இருந்து 44 லட்சத்து 10 ஆயிரத்து 472 கன மீட்டர் வண்டல் மண் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. 86 ஆயிரத்து 355 விவசாயிகள் உள்ளிட்டோர் பயனடைந்துள்ளனர்.

இந்நிலையில் சேலத்தில் 1934-ம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட மேட்டூர் அணை, 83 ஆண்டுகளில் ஒருமுறை கூட தூர்வாரப்படவில்லை. இதை தூர்வாரும் பணி நேற்று முதல்வர் கே.பழனிசாமியால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து முதல்கட்டமாக ஒரு லட்சம் கன மீட்டர் வண்டல் மண்ணை விவசாயிகள் கட்டணமின்றி எடுத்துக்கொள்ள தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x