Published : 14 Feb 2023 07:30 AM
Last Updated : 14 Feb 2023 07:30 AM
சென்னை: சென்னை சத்தியமூர்த்தி பவனில், முன்னாள் முதல்வர் பக்தவத்சலம் நினைவு நாள் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, பக்தவத்சலம் படத்துக்குமலர்கள் தூவி, மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதானி ரூ.10 லட்சம் கோடிக்கு மேல் ஊழல் செய்துள்ளார். இதைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் எஸ்பிஐ, எல்ஐசி முன் போராட்டங்கள் நடத்தி வருகிறோம். ஆனால், இதுகுறித்து பிரதமர் மோடி பேச மறுக்கிறார்.
இந்திய ரயில்வேயில் 2030-ம் ஆண்டு வரை 39 திட்டங்களை அறிவித்துள்ளனர். அதில், தமிழகத்துக்கு ஒரு திட்டம்கூட இல்லை. குறிப்பாக, கூடுதலாக அந்தியோதயா ரயில்களை இயக்கும் திட்டம், விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்கும் திட்டம் எதுவுமில்லை. ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது அதிகாரத்தை தாண்டி தமிழ்நாட்டை விமர்சிக்கிறார் இதைவன்மையாகக் கண்டிக்கிறோம்.
இந்தியாவில் எல்லா கிராமங்களிலும் தீண்டாமை நிலவுகிறது. தீண்டாமைக்கு எதிராக தமிழக அரசும், எங்கள் கூட்டணியும் இருக்கிறது. தமிழகத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக குற்றங்கள் நடைபெறுகின்றன. அவற்றை மூடி மறைக்கவில்லை. ஆனால், உத்தர பிரதேசம் போன்ற பாஜக ஆளும் பிற மாநிலங்கள் எப்படி இருக்கின்றன என ஒப்பிட்டுப் பார்த்து, விமர்சிக்க வேண்டும். இவ்வாறு அழகிரி கூறினார்.
நிகழ்ச்சியில், மாநில துணைத் தலைவர்கள் பொன்.கிருஷ்ணமூர்த்தி, உ.பலராமன், ஆ.கோபண்ணா, எஸ்.சி. அணித் தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார், மாவட்டத் தலைவர்கள் டெல்லி பாபு, எம்.எஸ்.திரவியம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT