Published : 14 Feb 2023 06:15 AM
Last Updated : 14 Feb 2023 06:15 AM
சென்னை: ரோந்து போலீஸார் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு தினமும் ரோந்து செல்கிறார்களா? என்பதைக் கண்காணிக்க, காவல் துறையில் செல்போன் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக காவல் துறை பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனினும் கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு, கடத்தல் உட்பட பல்வேறு வகையான குற்றங்கள் முற்றிலும் கட்டுக்குள் வரவில்லை. 2019 முதல் 2021 வரை 3 ஆண்டுகளில் 4,872 கொலைகள், 7,017 வழிப்பறிகள் மற்றும் திருட்டுகள் நடைபெற்றுள்ளன.
குற்றச் செயல்களை முன்கூட்டியே தடுக்கும் வகையில்ரோந்து பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. வாகன சோதனையும் இரவு, பகலாகச் சுழற்சி முறையில் நடைபெறுகிறது. சென்னையைப் பொருத்தவரை ரோந்து வாகனங்கள் பொதுமக்களுக்கு நன்கு தெரியும் வகையில் சாலையோரம் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் 24 மணி நேரமும் தயார் நிலையில் நிறுத்தி வைத்திருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், முக்கிய சாலைகள் மட்டும் அல்லாமல் வீடுகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், வணிக வளாக பகுதிகள், தெருக்கள் வழியாகவும் செல்ல வேண்டும் எனஅறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக சிறிய தெருக்களில் கூடஎளிதாகச் செல்லும் வகையில் சிறியவகை ரோந்து வாகனங்கள் போலீஸாருக்கு வழங்கப்பட்டுள்ளன.
போலீஸார் ரோந்து செல்வதைஉறுதி செய்யும் வகையில் வங்கிஏடிஎம்கள், மருத்துவமனைகள், முக்கியப் பகுதிகள், அலுவலகங்களில் காவல் துறை சார்பில் ‘பட்டா புத்தகம்’ வைக்கப்பட்டுள்ளது. ரோந்து செல்லும் போலீஸார், தாங்கள் ரோந்து சென்றதை உறுதிப்படுத்தும் வகையில் அதில் தேதி, நேரத்தைக் குறிப்பிட்டு கையொப்பம் இட்டுவிட்டுச் செல்வார்கள்.
ஆனால், பல ரோந்து போலீஸார் குறிப்பிட்ட நேரத்தில் ரோந்து செல்லாமல், சம்பந்தப்பட்ட பட்டாபுத்தகத்தை மொத்தமாக நிரப்பி வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதுமட்டும் அல்லாமல் ரோந்துபோலீஸார் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் ரோந்து செல்லாமல் சாலையோரம் மற்றும் மறைவான பகுதிகளில் ரோந்து வாகனத்தை நிறுத்திவிட்டு அதிலேயே ஓய்வு எடுப்பதாகவும் புகார்கள் எழுந்தன. இதற்குத் தீர்வு காணும் வகையில் ரோந்து போலீஸாரை கண்காணிக்க சென்னை காவல் துறையில் தனி செல்போன் செயலிஉருவாக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ``ரோந்து போலீஸார் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்துக்குச் சென்று அங்கு நின்றவாறே அவர்களது செல்போனில் ஏற்கெனவே பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலியில் தொட வேண்டும். இப்படி எத்தனை இடங்களுக்குச் செல்கிறார்களோ அங்கு வைத்து செயலியில் தொட வேண்டும். இதன் மூலம் அவர்கள்ரோந்து சென்றது உறுதி செய்யப்படும்.
இதை போலீஸ் அதிகாரிகள் தங்களது செல்போனிலேயே கண்காணிப்பார்கள். புதிய செயலி மூலம் சம்பந்தப்பட்ட ரோந்து போலீஸார் எத்தனை முறை அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்துக்குச் சென்றார் என வாரம், மாதம் வாரியாக துல்லியமாகக் கணக்கிட முடியும்.
போலீஸார் ரோந்து செல்லாமல் இருந்தால் அதுவும் தெரிந்துவிடும். இதனால் ரோந்து போலீஸார் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்குச் சென்றே ஆகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. முதலில் சென்னை அடையாறு காவல் மாவட்டத்தில் இதுஅறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த செல்போன் செயலியின் செயல்பாடு திருப்பி அளித்தால் தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும்'' என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT