Published : 13 Feb 2023 07:59 PM
Last Updated : 13 Feb 2023 07:59 PM
சேலம்: தமிழக முதல்வர் ஸ்டாலின் வரும் 15 மற்றும் 16-ம் தேதி சேலம் வருகை புரிந்து, வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் நேரடியாக கள ஆய்வு பணியில் ஈடுபடவுள்ளார். இதனை முன்னிட்டு, அனைத்து துறை அரசு அலுவலக அதிகாரிகளும், முதல்வரின் கள ஆய்வு செய்வதால், அரசு அலுவலகங்களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும், ஆய்வுக்கு தேவையான ஆவணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.
சேலம் வருகை புரியும் முதல்வர் ஸ்டாலின், எவ்வித முன்னறிவிப்புமின்றி நேரடியாக அரசு துறை அலுவலகங்களுக்கு சென்று கள ஆய்வு பணியில் ஈடுபட திட்டமிட்டுள்ளார். முதல்வர் ஸ்டாலின், எந்தப் பகுதிக்கு எப்பொழுது சென்று, அரசு அலுவலகங்களுக்கு செல்வார் என்பது தெரியாததால், மாநகராட்சி நிர்வாகம் முழுவீச்சில் அனைத்து சாலைகளிலும் ‘பேட்ஜ் - வொர்க்’ புதிய சாலை, புதிய குப்பை தொட்டிகளும், சாலை, பாலம், சாக்கடைகளை சுத்தம் செய்வதில் அதீத அக்கறை காட்டி வருகிறது.
அதேபோல, ரேஷன் கடை, அங்கன்வாடி உள்ளிட்ட அரசு சார்ந்த அலுவலகங்களை சுத்தமாக வைத்துக் கொள்ளவும், கட்டிடங்களுக்கு வண்ணப் பூச்சு பணியும் நடந்து வருகிறது. அதேபோல, முதல்வரின் ஆய்வுக்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் தயார் நிலையில் வைத்துக் கொண்டு அதிகாரிகள் ‘அலர்ட்’டாக உள்ளனர்.
கடந்த காலங்களில் முதல்வர்கள் எந்த மாவட்டத்துக்கு சென்றாலும், அவர்கள் செல்லும் பகுதிகளை மட்டுமே அதிகாரிகள் புதுப்பொலிவுடன் வைத்துக் கொள்வர். தற்போது, முதல்வர் ‘சர்ப்ரைஸ் விசிட்’ செய்யவுள்ளதால், மாவட்டம் முழுவதையும் சீர் படுத்திடவும், போக்குவரத்து சிக்கல்கள் ஏற்படாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதை மக்கள் ஆச்சர்யத்துடன் காண்கின்றனர்.
‘நெல்லுக்கு பாய்வது, புல்லுக்கும் பாய்வதை’ போல மக்கள் தாங்கள் தினமும் வாழும் பகுதியில் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அதிகாரிகளிடம் கூப்பாடு போட்டும் பலனில்லாமல் இருந்த நிலையில், ‘முதல்வர் வருகை’யால் சாலை, சாக்கடை, போக்குவரத்து, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை பிரச்சினைகளுக்கு விமோச்சனம் பிறந்துள்ளதை எண்ணி அகமகிழ்ந்திருக்கின்றனர்.
ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஒவ்வொரு மாவட்டத்துக்கும் முதல்வர் ‘சர்ப்ரைஸ் விசிட்’ செய்தால், பொதுமக்களின் ஏராளமான அடிப்படை பிரச்சினைகள் எழுவதற்கு வாய்ப்பில்லாத நிலை ஏற்படும் என பொதுமக்கள் தங்கள் ஆவலை வெளிப்படுத்தியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT