Published : 13 Feb 2023 12:01 PM
Last Updated : 13 Feb 2023 12:01 PM
மதுரை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த திமுக, அதிமுக நிர்வாகிகள் முழு மூச்சாக சுழன்று பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தல் பிப்.27-ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தல் பணிக்காக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடி பகுதிகளுக்கு திமுக, அதிமுகவினர் காலை, மாலை என இரு வேளை சென்று வாக்காளர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த திமுகவினருக்கு 7 வாக்குச்சாவடிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அமைச்சர் பி.மூர்த்திக்கு 3, கோ.தளபதிக்கு 2, எம்.மணிமாறனுக்கு 2 என தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டபொறுப்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல, அதிமுகவிலும் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமாருக்கு -4, செல்லூர்கே.ராஜூவுக்கு- 2, ராஜன் செல்லப்பாவுக்கு- 2 என 8 வாக் குச்சாவடிகள் கருங்கல்பாளையம் பகுதியில் ஒதுக்கப்பட்டுள்ளன. இங்கு 500-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் முகாமிட்டு தேர்தல் பணியாற்றி வருகின்றனர். இந்தப் பகுதியில் திமுக பொறுப்பாளராக அமைச்சர் ஐ.பெரியசாமி உள்ளார்.
இது குறித்து அரசியல் நோக்கர்கள் கூறியது: ஆளுங்கட்சியினர், எதிர்க்கட்சி யினர் தினமும் காலை, மாலை என இரண்டு வேளை வீடு வீடாகச் சென்று ஆதரவு கேட்டு வருகின்றனர். தினமும் மாலை வாக்காளர்களை திமுக கூட்டணிக் கட்சியினர் தங்கள் தேர்தல் காரியாலயத்துக்கு அழைத்துச் சென்று விடுகின்றனர்.
முதலில் 50 சதவீதம் பேர் சென்றனர். நாளுக்கு நாள் இது அதிகரித்து தற்போது 90 சதவீதம் பேர் வரை கட்சியின் தேர்தல் காரியாலயத்துக்குச் சென்று விட்டு வாக்காளர்களிடம் பேசி ஆதரவைத் தக்கவைத்து வருகின்றனர். வாக்காளர்களை அதிமுகவினர் சந்திக்க விடாமல் தடுப்பதற்காகவே திமுக கூட்டணியினர் திட்டமிட்டு இந்த வேலையைச் செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
திமுகவினர் ஆளுங்கட்சியாக இருப்பதால் செலவிலும் தாராளம் காட்டுகின்றனர். இதற்கு அதிமுகவினர் ஈடு கொடுக்க முடியாத நிலை உள்ளது. இருப்பினும், கடந்த ஆட்சியின் சாதனைகளைச் சொல்லி அதிமுகவினர் வாக்குச் சேகரித்து வருகின்றனர். தேர்தல் நெருங்க நெருங்க வாக்காளர்களின் ஆதரவைப் பெறுவதில் இரு கட்சியினரிடமும் கடும் போட்டி நிலவுகிறது.
தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் எந்தக் கட்சிக்கு எவ்வளவு வாக்குகள் கிடைக்கும் என்ற விவரம் வாக்கு எண்ணிக்கையில் துல்லியாகத் தெரிந்துவிடும். வாக்குகள் குறைந்துவிட்டால் அப்பகுதியில் பணியாற்றும் ஆளுங்கட்சியினருக்கு சிக்கல் என்பதால், அதற்குப் பயந்து திமுகவினர் முழுமூச்சாக களமிறங்கி வேலை செய்கின்றனர்.
குறிப்பாக அமைச்சர்கள் சிலர் முகாமிட்டு தொண்டர்களைக் கவனித்து உற்சாகப்படுத்தி வருகின்றனர். அதிமுகவினரும் அதற்கு சளைக்கவில்லை. ஏற்கெனவே, மதுரை மாவட்டத்தில் பல்வேறு இடைத் தேர்தல்களைச் சந்தித்த அனுபவம் இரு கட்சியினருக்குமே உள்ளதால், ஈரோட்டில் தங்கள் பணி விவரத்தை சக கட்சியினருக்கு மொபைல் போனில் பகிர்ந்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT