Last Updated : 13 Feb, 2023 12:02 PM

24  

Published : 13 Feb 2023 12:02 PM
Last Updated : 13 Feb 2023 12:02 PM

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் - பழ.நெடுமாறன் பேட்டி

பழ நெடுமாறன் | கோப்புப் படம்.

தஞ்சாவூர்: விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்றும் அவர் விரைவில் தமிழீழம் குறித்து விரிவான அறிக்கையை வெளியிடுவார் என்றும் உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூரில் இன்று காலை உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சர்வதேசச் சூழலும், இலங்கையில் ராஜபக்ச ஆட்சியை வீழ்த்தும் அளவுக்கு வெடித்துக் கிளம்பியிருக்கிற சிங்கள மக்களின் போராட்டங்களும், தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் வெளிப்படுவதற்கான உகந்த சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

இந்தச் சூழலில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் தற்போது நலமுடன் இருக்கிறார் என்கிற நற்செய்தியை உலகம் முழுவதுமுள்ள தமிழர்களுக்கு உறுதியாகத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். இதுவரை அவரைப் பற்றித் திட்டமிட்டுப் பரப்பப்பட்ட யூகங்களுக்கும், ஐயங்களுக்கும் இது முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்புகிறோம்.

இனிப்புகளை வழங்கிய பழ.நெடுமாறன்

தமிழீழ மக்களின் விடியலுக்கான திட்டத்தை விரைவில் அவர் அறிவிக்க இருக்கிறார். தமிழீழ மக்களும், உலகத் தமிழர்களும் ஒன்றுபட்டு நின்று அவருக்கு முழுமையான ஆதரவினை அளிக்க முன்வருமாறு வேண்டுகிறோம்.

விடுதலைப்புலிகள் வலிமையாக இருந்த காலம் வரை இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதையும் தங்கள் மண்ணில் காலூன்ற அனுமதிக்கவில்லை. இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதனுடனும், எந்தக் காலகட்டத்திலும் எத்தகைய உதவியும் பெறுவதில்லை என்பதிலும் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் மிக உறுதியாக இருந்தார். தற்போது இலங்கையில் ஆழமாகக் காலூன்றி இந்திய எதிர்ப்புத் தளமாக அதை ஆக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளதையும், இந்துமாக்கடலின் ஆதிக்கம் சீனாவின் பிடியில் சிக்கும் அபாயம் இருப்பதையும் எண்ணிப்பார்த்து, அதனைத் தடுக்கும் வகையிலான மேற்கொள்ள வேண்டும் என இந்திய அரசை வேண்டுகிறோம்.

இந்த முக்கியமான காலகட்டத்தில் தமிழக அரசும், தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிகளும், தமிழக மக்களும் ஒன்றுபட்டு நின்று தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்குத் துணை நிற்குமாறு வேண்டிக்கொள்கிறோம் என்றார்.

பின்னர் பொதுமக்களுக்கு பிரபாகரன் நலமுடன் இருப்பதாக வாழ்த்து தெரிவித்து இனிப்புகளை வழங்கினார் பழ. நெடுமாறன். பேட்டியின் போது ஈழக் கவிஞர் காசி. ஆனந்தன் சமதா கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் கோன் மற்றும் உலக தமிழர் பேரமைப்பின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

இலங்கையில் தமிழ் ஈழம் அமையப் பாடுபட்டவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன். கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கை அரசால் இவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது மனைவி, மகள், மகன்கள் அந்தப் போரில் கொல்லப்பட்டதாக அப்போதைய அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசு உறுதிப்படுத்தியது. இந்நிலையில், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்றும் அவர் விரைவில் தமிழீழம் குறித்து விரிவான அறிக்கையை வெளியிடுவார் என்றும் உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x