Published : 31 May 2017 12:26 PM
Last Updated : 31 May 2017 12:26 PM
மத்திய அரசு கொண்டுவந்துள்ள மாட்டிறைச்சி திருத்த சட்டத்தால் இந்தியாவில் 8 லட்சம் பேர் வேலையிழப்பர். அன்னியச் செலாவணி வருவாய் பாதிக்கப்படும் என திண்டுக்கல் தோல் வர்த்தகர் சங்கத் தலைவர் கே.ஏ.ஆர்.மொகைதீன் தெரிவித்தார்.
இதுகுறித்து திண்டுக்கல்லில் ‘தி இந்து’ செய்தியாளரிடம் அவர் கூறியது:
மத்திய அரசின் சட்டம் குறித்து அரசியல் கட்சியினர் பல்வேறு கருத்துகளைக் கூறிவருகின்றனர். நாங்கள் தொழில்ரீதியான கருத்தாக இதைத் தெரிவிக்கிறோம். தற்போது மத்திய அரசு கொண்டுவரும் மாட்டிறைச்சி சட்டத் திருத்தத்தால் தோல் பதனிடும் தொழில் முற்றிலும் பாதிக்கப்படும். இதன் மூலம் அரசுக்கு அன்னியச் செலாவணி இழப்பும் ஏற்படும். இதைக்கூட அவர்கள் வேறு வழியில் சமாளித்துக்கொள்ளலாம். ஆனால் இந்தத் தொழிலை நம்பியுள்ளவர்கள் நிலை கேள்விக்குறியாகிவிடும்.
இந்தியாவில் நடைபெறும் தோல் பதனிடும் தொழிலில் 40 சதவீதம் தமிழகத்தில் நடைபெறுகிறது. மீதமுள்ள 60 சதவீதம் மேற்குவங்கம், மகாராஷ்டிரம், உத்தரப்பிரதேசம், ஆந்திரா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் நடை பெறுகிறது. இந்தத் தொழிலை நம்பி தமிழகத்தில் மட்டும் நேரடியாக 2 லட்சம் பேரும், மறைமுகமாக 50 ஆயிரம் பேரும் வேலைவாய்ப்பை பெறுகின்றனர். இந்தியாமுழுவதும் குறைந்தபட்சம் 8 லட்சம் பேர் இந்த தொழிலில் பணியாளர்களாக உள்ளனர்.
தோல் பதனிடும் தொழிலில் பணி செய்பவர்கள் பெரும்பாலானோர் பின்தங்கிய சமூகத்தினர், படிப்பறிவில்லாதவர்கள். மத்திய அரசின் சட்டத்தால் இந்தியா முழுவதிலும் சுமார் 8 லட்சம் பேர் முழுமையாக வேலையிழக்கும் நிலை ஏற்படும். இத்துடன் தொழில் நடத்துபவர்கள் தொழிலை தொடர முடியாத நிலையில், அவர்கள் வங்கிக் கடன்களை செலுத்த முடியாத நிலையும் ஏற்படும். அன்னியச் செலாவணியை ஈட்டுவதிலும், வேலை வழங்குவதிலும் முன்னிலை வகிக்கும் தோல் பதனிடும் தொழில் முற்றிலுமாக மூடப்பட்டால் நாட்டில் அதிகளவு பாதிப்பு இருக்கும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT