Published : 13 Feb 2023 04:27 AM
Last Updated : 13 Feb 2023 04:27 AM
சேலம்: சேலம் - உளுந்தூர்பேட்டை 4 வழிச் சாலையில், இரு வழிச்சாலைகளாக உள்ள புறவழிச் சாலைகளில் சிலவற்றை 4 வழிச் சாலையாக மாற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
சேலம்- உளுந்தூர்பேட்டை இடையிலான 136 கிமீ நீள சாலையை, 4 வழிச்சாலையாக அமைக்கும் பணி 2005-ம் ஆண்டு, ஒப்பந்தம் எடுத்த தனியார் நிறுவனத்தால் தொடங்கப்பட்டு 2012-ம் ஆண்டில் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது. எனினும், 4 வழிச்சாலையில் உள்ள உடையாப்பட்டி (6.4 கிமீ), வாழப்பாடி (4.62 கிமீ), ஆத்தூர் (7.20 கிமீ), சின்னசேலம் (4.6 கிமீ),
கள்ளக்குறிச்சி ( 5.10 கிமீ), தியாகதுருகம் (3.90 கிமீ), இளவனாசூர்கோட்டை (4 கிமீ), உளுந்தூர்பேட்டை (2.57 கிமீ) ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்ட புறவழிச்சாலைகள் இருவழிச் சாலையாகவே அமைக்கப்பட்டன. இதனால், 4 வழிச்சாலையில் வேகமாக வரும் வாகனங்கள், திடீரென இரு வழிச்சாலைக்குள் நுழையும்போது, எதிரே வந்து கொண்டிருக்கும் வாகனங்களால் தடுமாறி, அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றன.
மேலும், பெருகிவிட்ட அதிவேக வாகனங்கள், இரு வழிச்சாலையில் ஒன்றையொன்று முந்திச் செல்ல முற்படும்போது, அடிக்கடி விபத்து ஏற்பட்டு, உயிரிழப்புகள் ஏற்படுவதும் தொடர் கதையாக உள்ளது. 2022-ம் ஆண்டு வரை புறவழிச்சாலைகளில் விரிவாக்கப் பணிகள் தொடங்கப்படாமல் இருந்த நிலையில், புறவழிச்சாலைகளை 4 வழிச் சாலைகளாக மாற்ற வேண்டும் என்று பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் உள்ளிட்டோர் மத்திய அரசை வலியுறுத்தினர்.
இந்நிலையில், சேலம்- உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இரட்டை சாலைகளில் சிலவற்றை 4 வழிச்சாலையாக மாற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் தற்போது வாழப்பாடி புறவழிச்சாலை, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இளவனாசூர்கோட்டை, உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலை உள்ளிட்டவற்றை, 4 வழிச்சாலையாக மாற்றும் பணி தொடங்கப்பட்டு, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
புறவழிச்சாலைகள் உள்ள இடங்களில், ஓடைகளைக் கடக்க பாலம் அமைக்கப்பட்டபோதே, 4வழிச்சாலை அமைக்க வசதியாகஅகலத்துடன் பாலம் கட்டப்பட்டிருந்தது. எனினும், அந்த பாலத்துக்குள் வாகனங்கள் செல்ல முடியாதபடி தடுப்புகள் அமைக்கப்பட்டன.
தற்போது, புறவழிச்சாலை விரிவாக்கம் மேற்கொள்ளப்பட்டிருக்கும் நிலையில், ஏற்கெனவே கட்டப்பட்ட சிறுபாலங்களுடன் சாலையை எளிதில் இணைக்க முடிவதால்,புறவழிச்சாலையை அகலப்படுத்தும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
விரைந்து முடிக்க வேண்டும் - இது குறித்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கூறியதாவது: 2014-ம் ஆண்டில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, சேலம்- உளுந்தூர்பேட்டை 4 வழிச்சாலையில், நாளொன்றுக்கு 2 லட்சத்துக்கும் கூடுதலாக வாகனங்கள் செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கரோனா காலத்துக்குப் பின்னர், சொந்தமாக கார்களை வாங்கிப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், சுங்க வசூல் தொகை பல மடங்கு அதிகரித்திருக்கும். எனவே, நிதி தட்டுப்பாடு பிரச்சினை எழ வாய்ப்பில்லை. இந்நிலையில், வாகனங்கள் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரிப்பு,விபத்துகள் அதிகரிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, அனைத்து புறவழிச்சாலைகளிலும் விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டு, அவற்றை நடப்பாண்டுக்குள் முடிக்க வேண்டும்.
குறிப்பாக, விபத்துகள் அதிகம் நிகழ்ந்த ஆத்தூர் புறவழிச்சாலையை, 4 வழிச்சாலையாக மாற்றுவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். சாலை பாதுகாப்பு அம்சங்களை முழுமையாக செயல்படுத்திட வேண்டும். மேலும், சுங்கக் கட்டணத்தை ஆண்டுதோறும் உயர்த்துவதை தவிர்க்க வேண்டும், என்றனர். அனைத்து புறவழிச்சாலைகளிலும்விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டு, அவற்றை நடப்பாண்டுக்குள் முடிக்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT