Published : 12 Feb 2023 07:06 PM
Last Updated : 12 Feb 2023 07:06 PM
மதுரை: முன்பதிபு இல்லாத ரயில் பயணச்சீட்டுக்களை ஆன்லைன் முறையில் பெறும் வசதி மூலம் 10 மாதங்களில் இரண்டரை கோடி பேர் பயனடைந்துள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
UTS செயலி பயன்பாடு: இது தொடர்பாக மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: முன்பதிவு இல்லாத ரயில் டிக்கெட்டுக்களை UTS செயலி மூலம் ஆன்லைனில் பெறும் வசதியை ரயில்வே அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம், சீசன் டிக்கெட்டுகள், பிளாட்பாரம் டிக்கெட்டுகள் ஆகியவற்றையும் பெற முடியும். ரயில் நிலையத்திலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவுக்குள் இருந்தபடி, பயணச்சீட்டை பதிவு செய்து கொள்ளலாம்.
காகிதம் இல்லாத முறையிலும், காகிதத்துடன் கூடிய முறையிலும் பயணச் சீட்டுகளை பதிவு செய்ய முடியும். காகிதம் இல்லா பயணச் சீட்டு என்பது நாம் பயணச் சீட்டு பதிவு செய்த மொபைல் போன் யூடிஎஸ் செயலியில் SHOW TICKET option பகுதியில் இருக்கும் என்பதால் அதனை டிக்கெட் பரிசோதகரிடம் காண்பிக்கலாம். காகிதத்துடன் கூடிய டிக்கெட்டுகளை ரயில் நிலையத்திலுள்ள தானியங்கி பயணச்சீட்டு பதிவு இயந்திரத்தின் மூலம் பெற்றுக்கொள்ள முடியும். இதேபோல், ரயில் நிலையங்களில் பயணச்சீட்டு அலுவலகம் அருகே ஒட்டப்பட்டுள்ள கியூஆர் கோடு (QR code) மூலமும் முன்பதிவு இல்லாத பயணச்சீட்டை எளிதாக பெற முடியும்.
வருமானம்: தெற்கு ரயில்வே பிரிவில் ஏப்ரல் 2022 முதல் ஜனவரி 2023 வரை பத்து மாதத்தில் மொபைல் போன் மூலம் 50.75 லட்சம் பயணச் சீட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் 2.51 கோடி பயணிகள் கூட்ட நெரிசல் இன்றி பயணச் சீட்டுகளை பதிவு செய்து ரயில்களில் பயணித்துள்ளனர் என்றும், இதன் மூலம் பயணச் சீட்டு வருமானமாக ரூ. 24.82 கோடி ஈட்டப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT