Published : 12 Feb 2023 05:56 PM
Last Updated : 12 Feb 2023 05:56 PM
கரூர்: கிருஷ்ணராயபுரம் அருகே மினி பேருந்தும் காரும் மோதிக்கொண்டதில், பின்னால் வந்த காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்தின் காரும் சேதமடைந்தது. எனினும் இந்த விபத்தில் எவ்வித பாதிப்பும் இன்றி கார்த்தி சிதம்பரம் அதிர்ஷ்டவசமாக தப்பினார்.
கரூர் மாவட்டம் மேட்டுமகாதானபுரத்தைச் சேர்ந்த மதன்குமார்(30) என்பவர், நேற்றிரவு கரூரிலிருந்து அவரது காரில் மேட்டுமகாதானபுரம் நோக்கி சென்றுள்ளார். பயணிகள் இல்லாத காலி மினி பேருந்து ஒன்று திருச்சியிலில் இருந்து ராசிபுரம் நோக்கி சென்றுள்ளது. கிருஷ்ணராயபுரம் சிவன் கோயில் அருகே இரவு சுமார் 11 மணி அளவில் சென்றுகொண்டிருந்தபோது மதன்குமார் ஓட்டிச் சென்ற கார், கட்டுப்பாட்டை இழந்து மினி பேருந்து மீது மோதியது. இதில் கார் தூக்கி வீசப்பட்டு பின்னால் வந்துகொண்டிருந்த கார் மீது விழுந்துள்ளது. பின்னால் வந்துகொண்டிருந்த காரில் சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் பயணித்துள்ளார். இந்த விபத்தில் கார்த்தி சிதம்பரத்தின் காரின் முன்பகுதி லேசாக சேதமடைந்தது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்றுவிட்டு கும்பகோணத்தில் ஒரு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க கார்த்தி சிதம்பரம் சென்றபோது இச்சம்பவம் நடந்துள்ளது. இதில் கார்த்தி சிதம்பரத்திற்கோ, அவரது கார் ஓட்டுநருக்கோ எவ்வித காயமும் ஏற்படவில்லை என்றும், இந்த சம்பவத்தை அடுத்து கார்த்தி சிதம்பரம் தனது ஆதரவாளர் வந்த மற்றொரு காரில் ஏறி கும்பகோணத்திற்கு புறப்பட்டு சென்றதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து மாயனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT