Published : 12 Feb 2023 04:07 PM
Last Updated : 12 Feb 2023 04:07 PM

''தமிழகத்தில் சமூகநீதி குறித்து நிறைய பேசுகிறோம். ஆனால்...'': ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த பிரதமர் மோடியும் அம்பேத்கரும் நூல் வெளியீட்டு விழா

சென்னை: தமிழகத்தில் சமூகநீதி குறித்து நிறைய பேசுகிறோம்; ஆனால் செயல்பாடு அதற்கு ஏற்றதாக இருப்பதில்லை என்று ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 'பிரதமர் மோடியும் அம்பேத்கரும்' என்ற நூல் வெளியீட்டு விழா இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது: "அம்பேத்கர் ஒரு தேசியவாதி. ஆங்கிலேயர்கள் பட்டியலின மற்றும் பழங்குடியினர் அரசியல் பிரதிநிதிகளை தேர்வு செய்யும் முறையைக் கொண்டுவந்து நாட்டை பிரித்தாள முயன்றபோது அதனை மலைபோல் இருந்து தடுத்தவர் அம்பேத்கர். ஆங்கிலேயர்களின் எண்ணத்தை செயல்படுத்த அவர் அனுமதிக்கவில்லை.

தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக நாம் என்ன செய்திருக்கிறோம்? நமது மாநிலத்தில் சமூகநீதி குறித்து நிறைய பேசுகிறோம். ஆனால், அதற்கு அடுத்த நாளே பட்டியலின மக்களுக்கு எதிரான கொடுமைகள் நடக்கின்றன. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் பட்டியலின மக்கள் குடியிருப்புப் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்தது, பொதுமக்கள் முன்னிலையில் பகிரங்கமாக அவமானப்படுத்தப்பட்டது, கோயிலுக்குள் பட்டியலின மக்களை அனுமதிக்க மறுப்பது போன்ற சம்பவங்கள் வேதனையளிக்கின்றன.

அதேபோல் பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்களை எடுத்துக்கொண்டால் யாரும் கைது செய்யப்படுவது இல்லை. அதோடு குற்றவியல் நடைமுறை சட்டம் மிக மோசமானதாக உள்ளது. நமது மாநிலத்தில் இவ்வாறு நடப்பது வலியை ஏற்படுத்துகிறது. பட்டியலின பெண்கள் தொடர்புடைய பாலியல் வன்கொடுமை வழக்குகளில் 7 சதவீத குற்றவாளிகளுக்கு மட்டுமே தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 93 சதவீதம் பேரை காவல்துறை சுதந்திரமாக விட்டுவிடுகிறது. இந்த நிலையில் நாம் சமூகநீதியைப் பற்றியும் அம்பேத்கரைப் பற்றியும் பேசிக்கொண்டிருக்கிறோம். பட்டியலின மக்களுக்கு வீடு கட்டுவதற்காக மத்திய அரசு ஒதுக்கும் நிதியில் 30 சதவீதம் மட்டுமே செலவழிக்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சியத் தொகை வேறு திட்டங்களுக்காக செலவழிக்கப்படுவதாகவும் சிஏஜி அறிக்கை கூறுகிறது. ஆனால் நாம் சமூகநீதியைப் பற்றி பேசுகிறோம்." இவ்வாறு அவர் மாநில அரசை மறைமுகமாக குற்றம் சாட்டி பேசியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x