Published : 12 Feb 2023 02:20 PM
Last Updated : 12 Feb 2023 02:20 PM
புதுச்சேரி: புதுச்சேரி மணலிபேட் கிராமத்திற்கு சங்காரபரணி ஆற்றங்கரையோரம் சுடுகாடு அமைத்துத் தர வேண்டும் என கோஷம் எழுப்பியவாறு அப்பகுதி மக்கள் சடலத்தை தூக்கிச் சென்ற நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி மண்ணாடிப்பட்டு கொம்யூனிலுள்ள மணலிப்பேட் கிராமத்தில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு வசிக்கும் மக்களுக்கான சுடுகாடு செல்ல முடியாத நிலையில் உள்ளது. பாதை குறுகியதாகவும், சேறும் சகதியுமாகவும் இருப்பதால் இவர்கள் சங்கராபரணி ஆற்றங்கரையோரம் சுடுகாட்டுக்கு இடம் கேட்டு வருகின்றனர். இதுவரை அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், மணலிபேட் கிராமத்தில் இறந்த அய்யனார் என்பவரின் உடல் இடுகாட்டுக்கு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டது. பாதை சேறும் சகதியுமாக இருப்பதால் வாகனம் நடுவழியில் சேற்றில் சிக்கிக்கொண்டது. சேற்றிலிருந்து வாகனத்தை விடுவிக்க பலரும் முயன்றனர். எனினும், முடியவில்லை. இதையடுத்து இறந்தவர் உடலை தூக்கிக்கொண்டு, சுடுகாடு கேட்டு கோஷமிட்டபடி ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு அவர்கள் நடந்து சென்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "மணலிபேட் பகுதிக்கு சங்காரபரணி ஆற்றங்கரையோரம் சுடுகாடு கேட்டு வருகிறோம். இதுவரை 3 எம்எல்ஏக்களிடம் கோரிக்கை வைத்தும் நடக்கவில்லை. சுடுகாட்டுக்குக் கூட இவ்வளவு ஆண்டுகளாகியும் போராடுகிறோம். ஒரு அதிகாரிகூட கண்டுகொள்ளவில்லை. எனினும், சுடுகாடு கேட்டு தொடர்ந்து போராடுவோம்" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT