Published : 12 Feb 2023 02:05 PM
Last Updated : 12 Feb 2023 02:05 PM
சென்னை: இந்தியா தற்சார்பு அடைய வேண்டும் என்ற அம்பேத்கரின் கனவை நனவாக்கும் நோக்கிலேயே பிரதமர் நரேந்திர மோடி அத்மநிர்பார் திட்டத்தை கொண்டுவந்திருப்பதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
'பிரதமர் மோடியும் அம்பேத்கரும்' என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று (பிப்.12) நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்டு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேசியது: "மக்களின் நலனுக்காகக் கொண்டு வரப்படும் திட்டங்களின் பயன் மக்களுக்கு முழுமையாகச் சென்று சேர வேண்டும் என்பதில் பிரதமர் நரேந்திர மோடி மிகவும் உறுதியாக இருக்கிறார். ஒரு திட்டத்தின் மூலம் மத்திய அரசு ரூ.100 ஒதுக்கினால் அந்த தொகை முழுமையாக பயனாளிக்குச் சென்று சேருவதை பிரதமர் நரேந்திர மோடி உறுதிப்படுத்தி இருக்கிறார். பணம் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் சென்று சேர்கிறது. இவ்வாறுதான், விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் நிதியை மத்திய அரசு வழங்கி வருகிறது. நாடு முழுவதிலும் 11 கோடி விவசாயிகளுக்கு அவர்களின் வங்கிக் கணக்கில் இந்த நிதி சென்று சேர்கிறது.
இதேபோல், பல்வேறு திட்டங்கள் மூலம் மத்திய அரசின் நிதி பயனாளிகளை நேரடியாகச் சென்று சேர்கிறது. இதன் மூலம், அரசுக்கு ஆண்டுக்கு கிட்டத்தட்ட இரண்டு லட்சம் கோடி ரூபாய் மிச்சப்படுத்தப்படுகிறது. இவை அனைத்தும் நமது வரிப்பணம். வரிப்பணம் மிச்சப்படுத்தப்படுவதால் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை மத்திய அரசால் செயல்படுத்த முடிகிறது. இந்த வகையில், பிரதமர் மோடி கடந்த 8 ஆண்டுகளில் நாட்டில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கி இருக்கிறார்.
கழிவறைகள் குறித்துப் பேச தயங்கும் காலம் ஒன்றிருந்தது. இன்றைக்கு ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீருடன், கழிவறை வசதியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது மத்திய அரசு. ஒரு ரூபாய்க்கு சானிட்டரி நாப்கின்கள் கிடைக்க மத்திய அரசு வழிவகை செய்துள்ளது. அதேபோல, பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின்கீழ் நாட்டில் 80 கோடி பேருக்கு வரும் டிசம்பர் வரை மாதத்திற்கு 5 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு இலவசமாக வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
தற்சார்பு இந்தியா எனும் அம்பேத்கரின் கனவை நிறைவேற்றும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி, ஆத்மநிர்பார் திட்டத்தைக் கொண்டுவந்தார். இன்றைக்கு இறால் ஏற்றுமதியில் இந்தியா உலகில் முதல் நாடாக விளங்கி வருகிறது. அம்பேத்கரின் பூர்வீக இல்லத்தை மத்திய அரசு கடந்த 2015-ம் ஆண்டு புதுப்பித்தது." இவ்வாறு மத்திய இணை அமைச்சர் எல். முருகன் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT