Published : 07 May 2017 11:29 AM
Last Updated : 07 May 2017 11:29 AM
தமிழகம் முழுவதும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மூலம் தினமும் 1 கோடி லிட்டர் வரை தண்ணீர் உற்பத்தி செய்துதர அமெரிக்காவின் 4 பெரிய நிறுவனங்கள் தயாராக உள்ளன. அரசு விரும்பினால் இதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாக அரசிடம் சென்னை ஹோட்டல்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சென்னையின் மக்கள்தொகை 74 லட்சம். தினமும் சில லட்சம் பேர் வந்து செல்கின்றனர். சென்னை குடிநீர் வாரியம் தினமும் 55 கோடி லிட்டர் குடிநீர் விநியோகம் செய்கிறது. நூற்றுக்கணக்கான லாரிகள் மூலமும் குடிநீர் வழங்கப்படுகிறது. இருப்பினும் குடிநீர் தேவையை முழுமையாகப் பூர்த்திசெய்ய முடியவில்லை. இந்த நிலையில், சென்னையில் உள்ள ஹோட்டல்களிலும் கடந்த சில நாட்களாக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், சாப்பிட வருபவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
தனியாரிடம் தினமும் 1 முதல் 3 லாரி லோடு தண்ணீர் வாங்கிப் பயன்படுத்துகின்றனர். 12,500 லிட்டர் தண்ணீர் கொண்ட ஒரு லாரி லோடு ரூ.2,500-க்கு விற்கப்படுகிறது. தற்போது லாரி தண்ணீரும் கிடைக்காததால் ஹோட்டல் நிர்வாகங்கள் திணறுகின்றன.
இதுபற்றி சென்னை ஹோட்டல் கள் சங்கத் தலைவர் எம்.ரவி, ‘தி இந்து’விடம் கூறியதாவது:
சென்னை ஹோட்டல்கள் சங்கத்தில் 2,500 ஹோட்டல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சென்னையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதிவு செய்யப்படாத உணவகங்களும் உள்ளன. சென்னையில் இதுவரை இல்லாத அளவுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால், ஹோட்டல் நடத்துபவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு காணும் திட்டத்தை அரசிடம் தெரிவித்துள்ளோம்.
அதன்படி, தமிழக கடலோரப் பகுதிகளில் தேவையான எண்ணிக்கையில் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்கள் அமைத்து தினமும் 1 லட்சம் லிட்டர் முதல் 1 கோடி லிட்டர் வரை குடிநீர் உற்பத்தி செய்து கொடுக்க அமெரிக்காவை சேர்ந்த 4 பெரிய நிறுவனங்கள் தயாராக உள்ளன. கடற்கரை பகுதியில் அவர்களுக்கு தேவையான இடம் கொடுத்தால் போதும். அரசு ஒரு பைசாகூட செலவு செய்யத் தேவையில்லை. 20 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் கடல் நீரைக் குடிநீராக்கி அரசுக்கு வழங் கவும், திட்டத்துக்கான முழு தொகை யை முதலீடு செய்யவும் அந்நிறு வனங்கள் தயாராக உள்ளன.
இத்திட்டத்தை நிறைவேற்றத் தேவையான அனைத்து ஏற்பாடு களையும் எங்கள் சங்கம் சார்பில் செய்யத் தயாராக இருக்கிறோம். இத்திட்டம் மூலம் தமிழகம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க முடியும்.
தவிர, நவீன தொழில்நுட்பத்தில் குப்பைகளை எரித்து அதில் இருந்து வெளிவரும் வாயு மூலம் மின்சாரம் தயாரித்துக் கொடுக்கவும் அமெரிக்க நிறுவனங்கள் தயா ராக உள்ளன. இதனால் குப்பை, மின்சாரம் ஆகிய 2 பிரச்சினை களையும் தீர்க்க முடியும். சென்னை யில் தினமும் ஹோட்டல்கள் மூலம் 2 ஆயிரம் டன் குப்பை கள் உட்பட 5 ஆயிரம் டன் குப்பை கள் சேர்கின்றன. இதுதொடர்பாக ஆலோசனை நடத்த அமைச்சர்கள், அதிகாரிகள் அழைத்தால் உடனடி யாக செல்லத் தயாராக இருக்கிறோம். நவி மும்பையில் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இத்திட்டத்தை செயல்படுத்த அரசே டெண்டர் விட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT