Published : 12 Feb 2023 11:42 AM
Last Updated : 12 Feb 2023 11:42 AM
சென்னை: பாஜகவின் முன்னாள் தமிழக தலைவரும், கட்சியின் தேசிய செயலாளருமான சி.பி.ராதாகிருஷ்ணனை ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் நியமனம்: புதிதாக 6 ஆளுநர்களை நியமித்தும், 7 ஆளுநர்களை வேறு மாநிலங்களுக்கு மாற்றியும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவரும், தேசிய செயலாளருமான சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவையைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன், கடந்த 1998 மற்றும் 1999-ம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் இருமுறை வென்று மக்களவை உறுப்பினராக இருந்தவர். கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை தேசிய கயிறு வாரியத்தின் தலைவராக இருந்துள்ளார். தமிழக பாஜகவின் மூத்த தலைவர்களான இல.கணேசன் மற்றும் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் தமிழகத்தில் இருந்து ஆளுநராக ஏற்கெனவே நியமிக்கப்பட்டுள்ள நிலையில், சி.பி.ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் இருந்து நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆளுநர்கள் நியமனமும் மாற்றமும்: உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி அப்துல் நசீர், ஆந்திர பிரதேச ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆந்திரப்பிரதேச ஆளுநராக இருந்த பிஸ்வ பூஷன் ஹரிசந்தன் சத்தீஸ்கர் மாநிலத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். ராஜஸ்தானைச் சேர்ந்த பாஜக தலைவர் குலாப் சந்த் கட்டாரியா அஸ்ஸாம் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். பாஜகவைச் சேர்ந்த மற்றொரு மூத்த தலைவரான லக்ஷ்மண் பிரசாத் ஆச்சாரியா சிக்கிம் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இமாச்சலப் பிரதேச ஆளுநராக சிவ பிரதாப் சுக்லா நியமிக்கப்பட்டுள்ளார். லடாக்கின் துணைநிலை ஆளுநராக ஆர்.கே. மாத்தூரின் ராஜினாமா ஏற்கப்பட்டு, அம்மாநில ஆளுநராக அருணாச்சலப் பிரதேச ஆளுநர் பி.டி. மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
மகாராஷ்ட்டிர ஆளுநர் கோஷியாரியின் ராஜினாமா ஏற்கப்பட்டு, அம்மாநிலத்திற்கு ஜார்க்கண்ட் ஆளுநரான ரமேஷ் பையஸ் மாற்றப்பட்டுள்ளார். அருணாச்சலப் பிரதேச ஆளுநராக ஓய்வுபெற்ற லெப்டினென்ட் ஜெனரல் கே.டி. பர்னாயக் நியமிக்கப்பட்டுள்ளார். சத்தீஸ்கர் ஆளுநராக இருந்த அனுசுயா உய்கி மணிப்பூர் ஆளுநராகவும், மணிப்பூர் ஆளுநராக இருந்த இல. கணேசன் நாகாலாந்து ஆளுநராகவும் மாற்றப்பட்டுள்ளனர். பிகார் ஆளுநராக இருந்த பாகு சவுஹான், மேகாலயா ஆளுநராகவும், இமாச்சலப் பிரதேச ஆளுநராக இருந்த ராஜேந்திர விஸ்வநாத் பிகார் ஆளுநராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT