Published : 12 Feb 2023 11:26 AM
Last Updated : 12 Feb 2023 11:26 AM

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சுயேச்சைகள் ஆதிக்கம் - பின்னணி காரணங்களும் அதிகாரிகளுக்கு உள்ள சவால்களும்

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இத்தனை பேர் போட்டியிடுவதன் பின்னணி குறித்தும் இதனால் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு ஏற்படும் நெருக்கடி குறித்தும் தற்போது பார்ப்போம்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் 27ம் தேதி நடக்கவுள்ளது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல், பரிசீலனை, திரும்பப் பெறுதல் போன்ற நடைமுறைகளுக்குப் பிறகு, 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில், அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சி அரசியல் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முன்னுரிமை கொடுக்கப் பட்டுள்ளது.

தேமுதிகவிற்கு முதலிடம்: இதன் படி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முதலிடத்தில் தேமுதிக வேட்பாளர் ஆனந்த் படமும், முரசு சின்னமும் இடம் பெறவுள்ளது. இதற்கு அடுத்தாற்போல், திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் படமும், கை சின்னமும் உள்ளது. மூன்றாவதாக அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு படமும், இரட்டை இலை சின்னமும் இடபெறவுள்ளது.

இதற்கு அடுத்தாற்போல், பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் படம் மற்றும் சின்னம் இடம் பெறவுள்ளது. இந்த பட்டியலில், 22வது இடத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் மேனகா நவநீதன் பெயரும், அவரது கரும்பு விவசாயி சின்னமும் இடம்பெறவுள்ளது. ஏற்கனவே சின்னம் அறிமுகமான நான்கு பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் தவிர மீதமுள்ள 73 வேட்பாளர்களுக்கும் பல்வேறு சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

குக்கருக்கு போட்டி: இதில், பச்சை மிளகாய், பலாப்பழம், அன்னாசி, தர்பூசணி, இஞ்சி, வெண்டைக்காய், காலிபிளவர் என காய்கறி, பழங்களில் தொடங்கி, மோதிரம், வைரம், ஆட்டோ, மிதிவண்டி, தொப்பி, கத்திரி, வளையல், இஸ்திரி பெட்டி என 73 சுயேட்சை வேட்பாளர்களுக்கு பல்வேறு சின்னங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதில், அமமுகவின் சின்னமாக அறியப்பட்ட குக்கர் சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்து விட்டதாக டிடிவி தினகரன் தெரிவித்தார். இந்த காரணத்தைக் கூறி, அமமுக வேட்பாளர் சிவ பிரசாந்த் வேட்பு மனுவை திரும்பப் பெற்றார். சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு நடந்த போது, குக்கர் சின்னம் கோரி நான்கு வேட்பாளர்கள் விருப்பம் தெரிவித்தனர்.

இதையடுத்து குலுக்கல் முறையில், கொங்கு தேச மறுமலர்ச்சி மக்கள் கட்சியைச் சேர்ந்த கேபிஎம் ராஜாவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டது. இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாத நிலையில், அக்கட்சியின் சின்னமான டார்ச்லைட் (மின்கல விளக்கு) விஸ்வபாரத் மக்கள் கட்சி வேட்பாளரான வேலுமணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த சட்டசபைத் தேர்தலின்போது, இந்த சின்னத்திற்கு 10 ஆயிரத்து 5 வாக்குகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

கூடுதலாக 1,100 இயந்திரங்கள்: ஈரோடு கிழக்கு தொகுதி வாக்குப் பதிவிற்காக 238 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு வாக்குப் பதிவிற்காக 30 சதவீத கூடுதல் ஒதுக்கீடு அடிப்படையில், 286 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 310 வி.வி.பேட் இயந்திரங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தன. தற்போது 77 வேட்பாளர்கள் போட்டியிடுவதால், ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 5
இயந்திரங்கள் தேவைப்படுகின்றன. இதனால், கூடுதலாக 1,100 மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் தேர்தலின்போது பயன்படுத்தப்படவுள்ளன. கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை பொதுத் தேர்தலின்போது, ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 128 வேட்பாளர்களே போட்டியிட்டனர். பெருந்துறையில் அதிகபட்சமாக 25 வேட்பாளர்களும், பவானிசாகரில் குறைந்தபட்சமாக 6 வேட்பாளர்களும் களமிறங்கினர். ஆனால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

சுயேச்சைகள் களமிறங்க காரணம்?: பொதுவாக, பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் பெயரைக் கொண்டவர்களை, சுயேச்சை வேட்பாளர்களாக நிறுத்தினால், வாக்களிப்போர் குழப்பமடைந்து அவருக்கு வாக்களிக்க வாய்ப்புள்ளது. இதன் மூலம், பிரதான கட்சி வேட்பாளரின் வெற்றியை தடுக்க முடியும். இந்த நோக்கத்திற்காக கடந்த காலங்களில் அரசியல் கட்சிகள் சுயேட்சைகளை பினாமியாக தேர்தலில் போட்டியிட வைத்த சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால், ஈரோடு கிழக்கில், பிரதான கட்சி வேட்பாளர்கள் பெயரில் சுயேட்சைகள் யாரும் போட்டியிடவில்லை.

சுயேச்சை வேட்பாளர்களின் வாக்குச்சாவடி முகவர் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர் ஆகிய பணிகளுக்கு, ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சியினர் தங்களது நிர்வாகிகளை பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர். ஈரோடு கிழக்கில் சுயேட்சைகள் ஆதிக்கம் அதிகம் என்பதால், ஒரு வாக்குச்சாவடியில் 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை வைக்க வேண்டியுள்ளது.

அதோடு, வேட்பாளர்களுக்கான வாக்குச்சாவடி முகவர்கள் என்ற அடிப்படையில், ஒவ்வொரு வாக்குசாவடி மற்றும் வாக்கு எண்ணும் மையத்தில் 77 பேர் இருக்கும் வகையில் இடம் ஏற்பாடு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சுயேச்சை வேட்பாளர்கள் ஏற்படுத்தும் இந்த சிக்கல், தேர்தல் நடத்தும் அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன.

தேர்தல் சீர்திருத்தம்: அகில இந்திய அளவில் தேர்தல் சீர்திருத்தம் ஏற்பட, ஈரோடு மாவட்டம் மொடக் குறிச்சி தொகுதி கடந்த காலத்தில் காரணமாக விளங்கியது. கடந்த 1996-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், மொடக்குறிச்சி தொகுதியில், விவசாயிகளின் கோரிக்கைகளை முன்னிருத்தி, 1033 வேட்பாளர்கள் போட்டியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். இந்த தேர்தலுக்குப்பின் நாடு தழுவிய அளவில், பல்வேறு விதிமுறைகள் கொண்டு வரப்பட்டு, தேர்தல் சீர்திருத்தம் நடக்க மொடக் குறிச்சி தொகுதி காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x