Published : 12 Feb 2023 06:56 AM
Last Updated : 12 Feb 2023 06:56 AM
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் சங்க காலத்தைச் சேர்ந்த வட்ட வடிவிலான கோட்டை, கொத்தளம் இருந்ததற்கான கட்டுமானம் உள்ளது. மேலும், அகழிகளும் உள்ளன. இப்பகுதியில் மிகவும் பழமையான கருப்பு, சிவப்பு பானை ஓடுகள், களிமண் அணிகலன்கள் ஏராளம் கிடைத்ததுடன், இரும்பு உருக்கு ஆலைகள் செயல்பட்டதற்கான கட்டமைப்பும் உள்ளது.
இதையடுத்து, தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை சார்பில் கடந்த 2021-ல் இந்தப் பகுதியில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், இப்பகுதியை மத்திய, மாநில அரசுகள் முழுமையாக அகழாய்வு செய்ய வேண்டும் என புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் நிறுவனர் ஆ.மணிகண்டன், தலைவர்
கரு.ராஜேந்திரன் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், பொற்பனைக்கோட்டையை அகழாய்வு செய்வதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் நிறுவனர் ஆ.மணிகண்டன் கூறியது: பொற்பனைக்கோட்டையில் முழுமையாக அகழாய்வு செய்வதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு முயற்சி மேற்கொண்ட தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
இங்கு முக்கிய தொல்லியல் ஆய்வாளர்கள் முன்னிலையில் நவீன தொழில்நுட்பக் கருவிகளை பயன்படுத்தி அகழாய்வு செய்யப்படும். இத்தகைய அகழாய்வு மூலம் தமிழர்களின் தொன்மைகள் வெளிப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT