Published : 12 Feb 2023 06:49 AM
Last Updated : 12 Feb 2023 06:49 AM
பழநி: பழநியில் எடப்பாடியை சேர்ந்த ஸ்ரீ பருவதராஜகுலம் திருவிழாக் குழு சார்பில் 365-வது ஆண்டாக பாதயாத்திரை பக்தர்களுக்கு வழங்க 17 டன் பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
முருகப்பெருமானின் மூன்றாம் படை வீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழாவையொட்டி பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து முருகனை வழிபட்டு சென்றனர். தைப்பூசத் திருவிழா முடிந்தும் பாதயாத்திரை பக்தர்களின் வருகை குறையவில்லை. அவ்வாறு வரும் பக்தர்களில், பழநி மலைக்கோயிலில் ஒருநாள் இரவு தங்கி வழிபட்டுச் செல்லும் உரிமை பெற்றவர்கள் சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த ஸ்ரீ பருவதராஜகுல திருவிழா குழுவினர்தான்.
காவடி சுமந்தபடி யாத்திரை: இந்த ஆண்டு தைப்பூசத் திருவிழாவையொட்டி 365-வது ஆண்டாக எடப்பாடியில் இருந்து காவடி சுமந்தபடி பாதயாத்திரையாக புறப்பட்ட குழுவினர் நேற்று முன்தினம் இரவு முதல் பழநிக்கு வந்த வண்ணம் உள்ளனர். இவர்கள் இன்று (பிப்.12) இரவு பழநி மலைக்கோயிலில் தங்கி பல்வேறு வழிபாடுகளை நடத்துவார்கள். இக்குழுவில் வரும் பக்தர்களுக்கு வழங்க டன் கணக்கில் பஞ்சாமிர்தத்தை அவர்களே தயார் செய்கின்றனர். அதற்காக, எடப்பாடியை சேர்ந்த பஞ்சாமிர்த தயாரிப்பு குழுவினர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பழநி மலைக்கோயில் மற்றும் அடிவாரத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்கி இருந்து, பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
சுவாமிக்கு அபிஷேகம்: 8 டன் மலை வாழைப்பழம், 6 டன் நாட்டு சர்க்கரை, 3 ஆயிரம் கிலோ பேரீச்சம் பழம், 1,000 கிலோ கற்கண்டு, 1,000 லிட்டர் நெய், 50 கிலோ ஏலக்காய், 200 லிட்டர் தேன் ஆகியவற்றை பயன்படுத்தி 17 டன் பஞ்சாமிர்தம் தயாரித்து வைத்துள்ளனர்.
இன்று அதில் ஒரு பகுதியை தண்டாயுதபாணி சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்த உள்ளனர். தொடர்ந்து, பக்தர்களுக்கு டப்பாவில் நிரப்பி வழங்க உள்ளனர். மேலும் இன்று (பிப்.12) இரவு மலைக்கோயிலில் தங்கி பூக்கோலமிட்டும், படி பூஜை நடத்தியும் வழிபட உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT