Published : 12 Feb 2023 06:19 AM
Last Updated : 12 Feb 2023 06:19 AM

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 99 ஆயிரத்து 604 வழக்குகளுக்கு சுமுக தீர்வு - ரூ. 959.77 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் அதிகபட்சமாக 99 ஆயிரத்து 604 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, மொத்தம் ரூ.959.77 கோடி இழப்பீடாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா அறிவுறுத்தலின்படி நடத்தப்பட்டது. சென்னை உயர் நீதிமன்ற சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் உயர் நீதிமன்றத்தில் அதன் தலைவரான நீதிபதி ஆர்.மகாதேவன் தலைமையில் நீதிபதிகள் ஆர்எம்டி.டீக்காராமன், எஸ்.எம்.சுப்ரமணியம், என்.சதீஷ்குமார், சி.சரவணன் ஆகியோர் மேற்பார்வையில் நடந்தது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் சத்திகுமார் சுகுமார குரூப், டி.வி.தமி்ழ்செல்வி, டி.பரத சக்ரவர்த்தி, முகமது ஷபீக், ஜெ.சத்யநாராயண பிரசாத், பி.பி.பாலாஜி மற்றும் ஓய்வுபெற்ற நீதிபதி பி.கோகுல்தாஸ் ஆகியோர் தலைமையில் 7 அமர்வுகளும், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் எஸ். ஸ்ரீமதி, ஆர்.விஜயகுமார், எல்.சி.விக்டோரியா கவுரி ஆகியோர் தலைமையில் 3 அமர்வுகளும் ஏற்படுத்தப்பட்டு ஆயிரத்து 387 வழக்குகள் விசாரிக்கப்பட்டன.

இதில் 231 வழக்குகளுக்கு இருதரப்பிலும் சமரச தீர்வு காணப்பட்டு ரூ. 27.37 கோடி, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக வழங்க உத்தரவிடப்பட்டது. இதில் 38 வழக்குகள் 5 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையாக இருந்த வழக்குகள் என்பது குறி்ப்பிடத்தக்கது. இந்த மக்கள் நீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள், உயர் நீதிமன்ற
தலைமைப் பதிவாளர் பி.தனபால், மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலர் ஏ.நசீர் அகமது, உயர் நீதிமன்ற சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் கே.சுதா உட்பட பலர் பங்கேற்றனர்.

இதேபோல மாநிலம் முழுவதும் நேற்று நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 460 அமர்வுகள் அமைக்கப்பட்டு அதிகபட்சமாக 99 ஆயிரத்து 604 நிலுவை வழக்குகளுக்கு இருதரப்பிலும் சுமுகத்தீர்வு காணப்பட்டது. இதன்மூலம் ரூ.959.77 கோடி இழப்பீட்டுத் தொகையை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x