Published : 12 Feb 2023 04:53 AM
Last Updated : 12 Feb 2023 04:53 AM

ரூ.105 கோடி மதிப்பில் 106 நவீன நெல் சேமிப்பு தளங்கள்: முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்

சென்னை: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் ரூ.105.08 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள 106 நவீன நெல் சேமிப்புத் தளங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும், ரூ.54 கோடியில் அமைக்கப்பட உள்ள 12 புதிய வட்ட செயல்முறைக் கிடங்குகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், காணொலி காட்சி மூலம் நெல் சேமிப்புத் தளங்களை முதல்வர் திறந்துவைத்தார். பொது விநியோகத் திட்டத்துக்கான உணவு தானியங்களை சேமிக்கும் வகையில், டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அதிக அளவில் கிடங்குகள் கட்டப்பட்டு வருகின்றன. இதையொட்டி, 10 மாவட்டங்களில், 18 இடங்களில் 2,86,350 டன் கொள்ளளவு கொண்ட, மேற்கூரையுடன் கூடிய நெல் சேமிப்புத் தளங்கள் ரூ.238.07 கோடி மதிப்பில் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அவற்றில் பணி முடிக்கப்பட்ட, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, திருவள்ளூர் மாவட்டங்களில், ரூ.105.08 கோடி மதிப்பில், மொத்தம் 1,42,450 டன் கொள்ளளவு கொண்ட, மேற்கூரையுடன் கூடிய 106 நவீன நெல் சேமிப்புத் தளங்களை முதல்வர் திறந்து வைத்துள்ளார். பொது விநியோக திட்டத்தில் விநியோகிக்கப்படும் பொருட்களை சேமித்துவைக்க புதிதாக உருவாக்கப்பட்டுள்ள வட்டங்களில், செயல்முறைக் கிடங்குகளை நிறுவவும் அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

2022-23-ம் ஆண்டுக்கான கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மானியக் கோரிக்கையில், உணவு தானியங்களைச் சேமிப்பதற்காக 12 வட்ட செயல்முறைக் கிடங்குகள், 28,000 டன் கொள்ளளவில், ரூ.54 கோடி மதிப்பில் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, சிவகங்கை, அரியலூர், வேலூர், திண்டுக்கல், திருச்சி, நாமக்கல், சேலம், திருவண்ணா மலை மாவட்டங்களில் ரூ.54 கோடி மதிப்பில், 28,000 டன் கொள்ளளவு கொண்ட, 12 புதிய வட்டச் செயல்முறைக் கிடங்குகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

இதன்மூலம் நியாயவிலைக் கடைகளுக்கு விநியோகம் செய்யப்படும் உணவுப் பொருட்களைப் பாதுகாப்பாக அந்தந்த வட்டத்துக்கு உள்ளேயே சேமித்து வைத்து, காலதாமதமின்றி நியாயவிலைக் கடைகளுக்கு அனுப்பிவைக்க முடியும். இந்த நிகழ்ச்சியில், உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் வே.ராஜாராமன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மேலாண் இயக்குநர் சு.பிரபாகர் கலந்துகொண்டனர். இதேபோல, காணொலி வாயிலாக நாமக்கல் மாவட்டத்திலிருந்து உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, வனத் துறை அமைச்சர் மா.மதிவேந்தன், எம்.பி.கேஆர்என்.ராஜேஷ் குமார், எம்எல்ஏக்கள் கே.பொன்னுசாமி, பி.ராமலிங்கம், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x