Published : 12 Feb 2023 04:47 AM
Last Updated : 12 Feb 2023 04:47 AM

இடைத்தேர்தல் நடக்கும் ஈரோடு கிழக்கில் பலத்த பாதுகாப்பு - துணை ராணுவத்தினர் அணிவகுப்பு

ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. கட்சியினர் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வந்த 2 கம்பெனி துணை ராணுவத்தினர் தொகுதியில் அணிவகுப்பு நடத்தினர்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் ஆணையம் வெளியிட்ட இறுதி வேட்பாளர் பட்டியல்படி, காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர் கட்சி, தேமுதிக உட்பட 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தொகுதியில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 16 வேட்பாளர்கள் பெயர் இடம் பெற முடியும். தற்போது 77 வேட்பாளர்கள் உள்ளதால் 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

77 வேட்பாளர்களின் பெயருக்கு பிறகு கடைசியாக ‘நோட்டா’வும் இடம்பெறும். எனவே, ஒரு வாக்குச்சாவடிக்கு 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஒரு கட்டுப்பாட்டு இயந்திரம், ஒரு விவிபேட் இயந்திரம் பயன்படுத்தப்படும் என்று தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே, அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உட்பட அந்தந்த அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.

தலைவர்கள் பிரச்சாரம்: திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் வரும் 24, 25-ம் தேதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. உள்ளிட்ட நிர்வாகிகளும் பிரச்சாரம் செய்ய உள்ளனர். இளங்கோவனை ஆதரித்து மநீம தலைவர் கமல்ஹாசன் வரும் 19-ம் தேதி பிரச்சாரம் செய்ய உள்ளார்.

இதுபோல, அதிமுக கூட்டணி வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவை ஆதரித்து முன்னாள் முதல்வர் பழனிசாமி வரும் 15-ம் தேதி முதல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். தென்னரசுவை ஆதரித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரும் 19, 20-ம்தேதிகளில் பிரச்சாரம் செய்ய உள்ளார். தேமுதிக வேட்பாளர் எஸ்.ஆனந்தை ஆதரித்து விஜயகாந்தின் மகன் வி.விஜய பிரபாகரன் வரும் 15-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை பிரச்சாரம் செய்ய உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதனை ஆதரித்து அக்கட்சி நிர்வாகிகளும் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்: இதற்கிடையே, தேர்தல் பாதுகாப்பு பணியில் தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், துணை ராணுவத்தினர், ரயில்வே பாதுகாப்பு படையினரை ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, சென்னை ஆவடி, வேலூரில் இருந்து தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் 160 பேர் 8-ம் தேதி ஈரோடு வந்தனர். இந்நிலையில் 32 வாக்குச் சாவடிகள் பதற்றமானதாக அடையாளம் காணப்பட்டதையடுத்து, 2 கம்பெனி துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

இதற்காக ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 2 கம்பெனி துணை ராணுவத்தினர் 184 பேர் ரயில் மூலமாக நேற்று ஈரோடு வந்தனர். ரயில்வே பாதுகாப்பு படை வீரர்களும் வந்துள்ளனர். இவர்கள், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, வாக்கு இயந்திரங்களை மீண்டும் தேர்தல் பிரிவு அலுவலகத்துக்கு கொண்டுசெல்லும் வரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். குறிப்பாக துணை ராணுவத்தினர் பதற்றமான வாக்குச்சாவடிகளில் முழுநேர பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே, தேர்தலை அமைதியாக நடத்தும் வகையிலும், வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதிசெய்யும் வகையிலும் நேற்றுமாலை துணை ராணுவப்படையினர் அணிவகுப்பு நடத்தினர். ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட ராஜாஜிபுரம் பகுதியில் தொடங்கிய அணிவகுப்பு, கிருஷ்ணம்பாளையம், வைராபாளையம், பவானிசாலை வழியாக பெரிய அக்ரஹாரம் பகுதியில் நிறைவடைந்தது. ஈரோடு டிஎஸ்பி ஆனந்தகுமார், கமாண்டன்ட் ரத்தோர் தலைமையில் நடந்த இந்த அணிவகுப்பில், 180 துணை ராணுவப் படையினர், 75 தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், 50 தமிழக போலீஸார் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x