Published : 11 Feb 2023 11:33 PM
Last Updated : 11 Feb 2023 11:33 PM
மதுரை: மதுரையில் உயர் நீதிமன்ற கிளை மற்றும் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் ரூ.295 கோடியே 17 லட்சம் அளவுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.
உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தேசிய மக்கள் நீதிமன்றம் இன்று நடைபெற்றது. இதனை உயர் நீதிமன்ற சட்டப்பணிகள் குழு தலைவரும், நீதிபதியுமான ஆர்.மகாதேவன், நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
மக்கள் நீதிமன்றம் நீதிபதிகள் எஸ்.ஸ்ரீமதி, ஆர்.விஜயகுமார், எல்.விக்டோரியா கவுரி ஆகியோர் தலைமையில் 3 அமர்வுகளாக நடைபெற்றது. இதில் மாவட்ட ஓய்வு பெற்ற நீதிபதிகள் எஸ்.உதயன், என்.ஆர்.பூபாளன், ஏ.சுப்பிரமணியன், வழக்கறிஞர்கள் எஸ்.சுரேஷ் ஐசக்பால், டி.எஸ்.முகமதுமுகைதீன், பி.ஆர்.பாலசுப்பிரமணியன் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர்.
இந்த 3 அமர்வுகளிலும் மோட்டார் வாகன விபத்து வழக்கு உட்பட 418 வழக்குகள் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. இதில் 52 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு 5 கோடியே 97 லட்சத்து 1283 ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது. பதிவாளர் (நீதி) என்.வெங்கடவரதன் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் நீதிபதிகள் ராஜவேல், தமிழரசி, செங்கமலச்செல்வன், அனுராதா, ஏ.கே.கே.ரஜினி, நாகலெட்சுமி, சார்பு நீதிபதிகள் பசும்பொன் சண்முகையா, ராபின்சன் ஜார்ஜ், ராஜா மகேஷ், அகிலா, சண்முகவேல் ராஜ், வீ.தீபா மற்றும் நீதித்துறை நடுவர்கள், முன்சீப்கள், வழக்கறிஞர்கள் 27 அமர்வுகளில் வழக்குகளை விசாரித்தனர்.
மொத்தம் 17,730 வழக்குகள் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. இதில் 16 ஆயிரத்து 894 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு பாதிக்கப்பட்டோருக்கு ரூ.289 கோடியே 20 லட்சத்து 63 ஆயிரத்து 368 அளவுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.
உயர் நீதிமன்ற மதுரை கிளை மற்றும் மாவட்ட நீதின்றத்தில் இன்று நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.295 கோடியே 17 லட்சத்து 64 ஆயிரத்து 651 மதிப்பில் நிவாரணம் வழங்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT