Published : 11 Feb 2023 04:24 AM
Last Updated : 11 Feb 2023 04:24 AM
சென்னை: பொதுப் போக்குவரத்தை பாதுகாப்பதற்கான விழிப்புணர்வு மாரத்தான் தமிழகம் முழுவதும் 22 இடங்களில் நாளை நடைபெறவுள்ளது.
சாலை விபத்தைக் குறைத்தல், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தி பொதுப் போக்குவரத்து வாகனங்களை அதிகளவு பயன்படுத்துதல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான மாரத்தான் போட்டி தமிழகம் முழுவதும் நாளை (பிப்.12) நடைபெறவுள்ளது.
மாநிலம் முழுவதும் திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட 22 நகரங்களில் ஒரே நேரத்தில் இதுபோன்ற மாரத்தான் போட்டி நடைபெறும். மாரத்தானை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சிஐடியு), ஐடிடிபி, சிஏஜி, திராவிடர் கழகம், திராவிடர் விடுதலை கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ளன.
அமைச்சர்கள் பங்கேற்பு: அதன்படி, சென்னை, பெசன்ட் நகர் அவென்யூவில் நாளை காலை 6 மணிக்கு நடைபெறும் மாரத்தானை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைக்கிறார்.
இதே போல் ஈரோட்டில் அமைச்சர் சு.முத்துசாமி மற்றும் சா.சி.சிவசங்கர் ஆகியோர் மாரத்தானை தொடங்கி வைக்கவுள்ளனர்.
மற்ற இடங்களில் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர்கள், அரசுத் துறை உயர் அலுவலர்கள் தொடங்கி வைக்கின்றனர்.
வெற்றி பெறுவோருக்கு ரொக்கப் பரிசு மற்றும் பங்கேற்பாளர்களுக்கு சான்றுகள் வழங்கப்பட இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT