Published : 11 Feb 2023 04:30 AM
Last Updated : 11 Feb 2023 04:30 AM
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரத்தில் தொடர்புடைய ஐபிஎஸ் உட்பட போலீஸ் அதிகாரிகள் மீது எடுக்கப்பட உள்ள நடவடிக்கை குறித்து ஆய்வு தொடங்கி உள்ளது. இதன் முன்னோட்டமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தனித்தனியாக தன்னிலை விளக்கம் கேட்டு பெறப்பட்டுள்ளது. இதனால், தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.
தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி தொடர் போராட்டம் 2018-ல் நடைபெற்றது. 100-வது நாளாக 22-5-2018 அன்று நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது. இதில், காவல் துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 11 ஆண்கள், 2 பெண்கள் என 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 40 பேர் பெரிய அளவிலும், 64 பேர் சிறிய அளவிலும் காயமடைந்தனர். கடந்த அதிமுக ஆட்சியின்போது நடைபெற்ற இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.
இந்த துப்பாக்கி சூடு விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் 23.05.2018-ல் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. விசாரணை ஆணையம் பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலங்களை பதிவு செய்தது. விசாரணை ஆணையத்தின் இறுதி அறிக்கை அரசிடம் 18.05.2022 அன்று சமர்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்தாண்டு அக்டோபரில் தமிழக சட்டப் பேரவையில் ஆணையத்தின் அறிக்கை 4 பகுதிகளாக தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ‘ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் 100-வது நாளையொட்டி போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் வன்முறையில் இறங்க வாய்ப்புள்ளதாக முன்கூட்டியே தூத்துக்குடி மாவட்ட காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. இது காவல்துறை, மாவட்ட நிர்வாகத்தின் குறைபாடு, அலட்சியம் ஆகும். காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லை.
சுடலைக்கண்ணு என்ற காவலர் மட்டும் அபாயகரமான துப்பாக்கியால் 17 ரவுண்டுகள் சுட்டுள்ளார். அவரை 4 இடங்களில் வைத்து சுட வைத்துள்ளதன் மூலம், அவரை அடியாள் போல் காவல்துறை பயன்படுத்தியுள்ளது. போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீஸார் மறைந்திருந்து துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
துப்பாக்கி சூடு நடைபெறும்போது கடைபிடிக்க வேண்டிய அணுகுமுறைகள் பின்பற்றப்படவில்லை. காவல்துறையினர் வரம்பு மீறியும், அத்து மீறியும் செயல்பட்டு இருக்கிறார்கள் என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தது. மேலும், துப்பாக்கி சூடு விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர், 17 காவல் துறையினர் உட்பட 21 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் பரிந்துரைத்தது.
ஆணையத்தின் பரிந்துரைகளை அரசு முழுமையாக ஏற்றுக் கொள்வதாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு தெரிவித்தார். மேலும், ஆணையத்தின் ஆலோசனைகளை ஏற்று தொடர்புடைய துறைகளால் பொருத்தமான ஆணைகளை வழங்குவதற்காக விரிவாக ஆய்வு செய்ய அரசு முடிவு செய்துள்ளது எனவும் அறிவித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக துப்பாக்கி சூட்டில் நேரடியாக ஈடுபட்டதாக அப்போதைய காவல் ஆய்வாளர் திருமலை, முதல்நிலை காவலர் சுடலைக்கண்ணு உட்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், அடுத்த கட்டமாக வழக்கில் தொடர்புடைய மீதம் உள்ள ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட போலீஸ் அதிகாரி மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்த ஆய்வு டிஜிபி அலுவலகத்தில் தொடங்கி உள்ளது. முதல் கட்டமாக சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளிடம் தனித்தனியாக தன்னிலை விளக்கம் கேட்டு பெறப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக அப்போதைய தென்மண்டல ஐ.ஜி சைலேஷ் குமார் யாதவ் (சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி), டிஐஜி கபில்குமார் சி.சரத்கர் (சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர்), ஒரு துணை ஆணையர், ஒரு டிஎஸ்பி, 3 இன்ஸ்பெக்டர், ஒரு எஸ்ஐ மற்றும் 7 போலீஸார் நேரில் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட உள்ளது.
இதற்கான அழைப்பாணை சம்பந்தப்பட்டவர்களுக்கு விரைவில் அனுப்பப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து குற்றத்தின் தன்மையை பொறுத்து ஒழுங்கு நடவடிக்கை அல்லது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT