Published : 11 Feb 2023 04:04 AM
Last Updated : 11 Feb 2023 04:04 AM
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் உட்பட 77 பேர் போட்டியிடுகின்றனர். அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளுக்கு அவர்களுக்குரிய சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 31-ம் தேதி தொடங்கி, 7-ம் தேதி நிறைவடைந்தது.
காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர், அமமுக வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் உட்பட மொத்தம் 96 வேட்பாளர்கள், 121 வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். கடந்த 8-ம் தேதி நடந்த வேட்புமனு பரிசீலனையின்போது, அதிமுக ஓபிஎஸ் அணி வேட்பாளர் செந்தில் முருகனின் வேட்புமனு உள்ளிட்ட 38 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 83 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுக்களை திரும்ப பெற, நேற்று (10-ம் தேதி)மாலை 3 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டது.
குக்கர் சின்னம் ஒதுக்கப்படாததால், இடைத்தேர்தலில் போட்டியிடுவதில்லை என டிடிவி தினகரன் அறிவித்ததை அடுத்து, அமமுக வேட்பாளர் சிவபிரசாந்த் தனது வேட்புமனுவை நேற்று திரும்ப பெற்றார்.
இதேபோல, 5 சுயேச்சை வேட்பாளர்களும் மனுவை திரும்ப பெற்றனர்.
இதையடுத்து, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக, தேர்தல் நடத்தும் அலுவலர் க.சிவகுமார் அறிவித்தார்.
சின்னங்கள் ஒதுக்கீடு: இடைத்தேர்தலில் போட்டியிடும், அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளுக்கு அவர்களுக்குரிய சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணைய உத்தரவின்படி, அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் கையொப்பமிட்டு அளித்த ‘ஏ’ மற்றும் ‘பி’ படிவங்களை வேட்புமனுவுடன் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு தாக்கல் செய்திருந்த நிலையில், அவருக்கு ‘இரட்டைஇலை’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதேபோல, தேமுதிக வேட்பாளர் ஆனந்துக்கு முரசு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட அரசியல்கட்சி என்ற அடிப்படையில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதனுக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
குக்கருக்கு போட்டி: பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணி நேற்று மாலை நடந்தது. இதில், அமமுக ஏற்கெனவே பெற்றிருந்த குக்கர் சின்னத்தை பெற 4 சுயேச்சை வேட்பாளர்கள் விருப்பம் தெரிவித்தனர். இதையடுத்து குலுக்கல் முறையில், கொங்கு தேச மறுமலர்ச்சி மக்கள் கட்சி வேட்பாளர் கேபிஎம் ராஜாவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டது.
வாக்குப்பதிவு இயந்திரம்: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு, 238 வாக்குச்சாவடிகளில் நடக்க உள்ளது.
தேர்தலில் தற்போது 77 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில், அவர்களோடு நோட்டாவையும் சேர்த்து, 78 பேருக்கு வாக்காளர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 16 வேட்பாளர்கள் பெயர் மற்றும் சின்னத்துடன் வாக்களிக்க வசதி உள்ள நிலையில், ஒரு வாக்குச்சாவடிக்கு 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஒரு கட்டுப்பாட்டு இயந்திரம், ஒரு விவிபேட் இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment