Published : 11 Feb 2023 06:30 AM
Last Updated : 11 Feb 2023 06:30 AM

கொள்கை, அரசியல் சார்பு அடிப்படையில் அரசின் முடிவு இருக்கக் கூடாது: ஆர்எஸ்எஸ் பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி

சென்னை: ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணிக்கு திறந்தவெளியில் அனுமதி அளிக்க போலீஸாருக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அரசின் முடிவு பொது நலன் அடிப்படையில் இருக்க வேண்டுமேயன்றி கொள்கை, அரசியல் சார்பு அடிப்படையில் இருக்கக்கூடாது என்றும் தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்குமாறு கடந்த ஆண்டு செப்.22-ம் தேதி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை போலீஸார் அமல்படுத்தவில்லை எனக் கூறி ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, சுற்றுச்சுவருடன் கூடிய விளையாட்டு மைதானங்களில் அணிவகுப்பு பேரணியை நடத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, ஆர்எஸ்எஸ் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு, நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீக்ஆகியோர் அடங்கிய அமர்வில்தொடர்ந்து நடந்து வந்தது. ஆர்எஸ்எஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஜி.ராஜகோபாலன், என்.எல்.ராஜா மற்றும் வழக்கறிஞர் ரபு மனோகர் உள்ளிட்ட பலர் ஆஜராகி,‘‘ஏற்கெனவே அனுமதி வழங்கி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை போலீஸார் அமல்படுத்தவில்லை என கூறி தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், சுற்றுச்சுவருடன் கூடிய விளையாட்டு மைதானத்தில் நடத்த வேண்டும் என்று தனி நீதிபதி உத்தரவிட்டது தவறு.

பாப்புலர் பிரன்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு விதிக்கப்பட்ட தடையால் சட்டம் - ஒழுங்கு பிரச்சினையை சுட்டிக்காட்டி ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுப்பது பாரபட்சமானது. மற்ற அமைப்புகளுக்கு அனுமதி அளித்துள்ள தமிழகஅரசு, ஆர்எஸ்எஸ் பேரணிக்கு மட்டும்அனுமதி மறுக்கிறது’’ என வாதிட்டனர்.

இதற்கு ஆட்சேபம் தெரிவித்து தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதிடும்போது. ‘‘உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த தமிழக அரசு தயாராக இருந்தபோது பேரணி நடைபெறாது என அறிவித்தது ஆர்எஸ்எஸ்தான். எனவே, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. சட்டம் - ஒழுங்கு பிரச்சினையை காக்க வேண்டியது மாநிலஅரசின் கடமை. அதில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் அடங்கும். தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ வேண்டும் என்பதால்தான் உளவுத்துறை அறிக்கையின் அடிப்படையில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது’’ என வாதிட்டிருந்தார்.

இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், நீதிபதிகள் கடந்த ஜன.24-ல் தீர்ப்பை தேதிகுறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தனர். இந்நிலையில், இந்த வழக்கில்நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் அமர்வு நேற்று பிறப்பித்துள்ள தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணியை சுற்றுச்சுவருடன் கூடிய மைதானங்களில் நடத்த வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. கருத்துரிமை மற்றும் பேச்சுரிமையை தடுக்காத வகையில் தமிழக அரசு செயல்பட வேண்டும். எனவே, ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணிக்கு நிபந்தனைகளுடன் போலீஸார் அனுமதி அளிக்க வேண்டும்.

இந்த பேரணிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் செப்.22-ல் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்து இருக்க வேண்டும். அல்லது அந்த உத்தரவை அமல்படுத்தியிருக்க வேண்டும். இரண்டையும் செய்யாத நிலையில் இதை நீதிமன்ற அவமதிப்பாகத்தான் கருத வேண்டும்.

திறந்தவெளியில் பொது சாலைகளில் அணிவகுப்பு நடத்துவது என்பது அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை. இதுபோன்ற அணிவகுப்புகளுக்கு உளவுத்துறை அறிக்கையை சுட்டிக்காட்டி கட்டுப்பாடுகள் விதிக்க மட்டுமே அரசுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், முழுமையாக தடை செய்யமுடியாது. சட்டம் - ஒழுங்கை பராமரிக்க வேண்டியது மாநில அரசின்கடமை.

மாற்றுக்கொள்கை உள்ளஅமைப்புகள் இருக்கின்றன என்பதற்காக இதுபோன்ற அணிவகுப்புக்கு அனுமதி மறுக்க முடியாது. அரசின் முடிவு பொது நலன் அடிப்படையில் இருக்க வேண்டுமேயன்றி கொள்கை, அரசியல் சார்புஅடிப்படையில் இருக்கக்கூடாது. ஆரோக்கியமான ஜனநாயகத்தைபேண, அமைதியான முறையில்பேரணி, அணிவகுப்பு, பொதுக்கூட்டம், போராட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்குவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும்.

எனவே, ஆர்எஸ்எஸ் அமைப்பு திறந்தவெளியில் பேரணி நடத்தபோலீஸார் அனுமதி அளிக்க வேண்டும். ஆர்எஸ்எஸ் அமைப்பினர் ஒழுக்கத்தை கடைபிடித்து அமைதியான முறையில், மற்றவர்களுக்கு எந்தவொரு ஊறும் விளைவிக்காத வாறு பேரணியை நடத்த வேண்டும்.இதற்கு தேவையான பாதுகாப்பை தமிழக அரசு வழங்க வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

ஆர்எஸ்எஸ் அமைப்பினர் ஒழுக்கத்தை கடைபிடித்து அமைதியான முறையில், மற்றவர் களுக்கு எந்தவொரு ஊறும் விளைவிக்காத வண்ணம் பேரணியை நடத்த வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x