Published : 11 Feb 2023 06:23 AM
Last Updated : 11 Feb 2023 06:23 AM
திருப்பூர்: அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்கான இறுதிகட்ட பணிகள் நெருங்கியுள்ள நிலையில், அவிநாசியில் திட்டம் பயன்பெறும் குளத்தில், பல்வேறு பகுதிகளில் இருந்து கழிவுநீர் கலப்பதால் மாசுபடும் நிலை உருவாகியுள்ளது.
ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய 3 மாவட்ட மக்களின் 3 தலைமுறைகளின் கனவாக அத்திக்கடவு - அவிநாசி திட்டம் உள்ளது. இதன்மூலமாக, 3 மாவட்டங்களில் ஏராளமான குளம், குட்டைகளில் நீர் நிரப்பி, விவசாயம் மற்றும் நிலத்தடி நீர் மூலமாக பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இந்நிலையில், அவிநாசியிலுள்ள சங்க மாங்குளத்தின் பல்வேறு பகுதிகளையும் கழிவுநீர் சூழ்வதால், திட்டம் மாசுபடுவதாக தெரிவிக்கின்றனர் அப்பகுதியினர்.
இதுதொடர்பாக அவிநாசியை சேர்ந்தவர்கள் கூறும்போது, "அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தையொட்டி, பிப்ரவரி 15-ம் தேதிக்குள் அனைத்து குளம், குட்டைகளும் நிரப்பப்படும் என அமைச்சர் சு.முத்துசாமி கூறுகிறார். விரைவில்திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
அதேசமயம், திட்டத்தில் பயன்பெறும் சங்கமாங்குளத்தில், நீர்வளத் துறை சார்பில் புனரமைப்புப் பணிகள் ரூ.1 கோடியே 32 லட்சத்து 88 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வருகின்றன. குளம் மாசுபட்டு வருவதும் மற்றொருபுறம் அரங்கேறி வருகிறது. அதாவது சங்கமாங்குளத்தை ஒட்டியிருக்கும் பெரிய பின்னலாடை ஏற்றுமதி நிறுவனத்தின் தொழிலாளர் விடுதியில் இருந்து வெளியேறும் ஒட்டுமொத்த கழிவுநீரும், குளத்தில் நாள்தோறும் கலக்கிறது. தற்போது கழிவுநீர் அதிகரித்திருப்பதால், அப்பகுதியின் நிலத்தடி நீர் பாதிக்கும் நிலை உள்ளது.
அதேபோல, மடத்துப்பாளையம் குளத்தின் மேற்கு பகுதியில், தனியார் அடுக்குமாடி குடியிருப்பின் கழிவுநீரும் சங்கமாங்குளத்தில் கலக்கிறது.
அவிநாசி நகரில் உள்ள 2 தனியார் பள்ளிகளின் கழிவுநீரும், சில பகுதிகளின் கழிவுநீரும் குளத்தில் கலப்பதால், குளம் முழுவதும் கழிவுநீர் சூழ்ந்திருப்பதாகவே அறிகிறோம். கழிவுநீர் குளமாக சங்கமாங்குளம் உருமாறி வருகிறது. மேற்கண்ட எந்த கழிவுநீரும் சுத்திகரிப்பின்றி குளத்தில் திறந்துவிடப்படுவதால், அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தின் நோக்கம் முழுமையாக சிதைகிறது.
விரைவில், அத்திக்கடவு- அவிநாசிதிட்டபணிகளை முடித்து திறப்புவிழாவுக்கு அரசு தயாராகி வரும்நிலையில், இந்த பிரச்சினைகளையும் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுப்பதுதான், திட்டத்தை நம்பியிருக்கும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு நன்மை தரும்" என்றனர்.
அவிநாசி வட்டாட்சியர் ராஜேஷ் கூறும்போது, "இந்த புகார்கள் தொடர்பாக, நீர்வளத் துறை அதிகாரி களின் கவனத்துக்கு கொண்டு சென்று, சங்கமாங்குளம் மாசுபடாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
அவிநாசி நீர்வளத் துறை உதவிப் பொறியாளர் நல்லதம்பி கூறும்போது, "சங்கமாங்குளத்தின் சில இடங்களில் கழிவுநீர் கலப்பதுதொடர்பாக புகார்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக, பேரூராட்சிக்கு தகவல் அளித்துள்ளோம். சாயப்பட்டறை கழிவுகள் குளத்தில் கலப்பது தடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, மற்ற கழிவுநீர் கலப்பதை தடுக்க, வரும் வாரத்தில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT